இறுதிக்கட்ட மீட்புப் பணிகள்! தயார் நிலையில் மருத்துவ உதவிகள்!
உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சுரங்கத்தில் சிக்கியவர்களை குழாய் வழியாக மீட்டதும் அவர்களுக்கு முதலுதவி கொடுப்பதற்கு சில்க்யாரா பகுதியில் சுரங்கத்தின் வாயிலருகே ஆம்புலன்ஸ் வசதிககளுடன் மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் 4.5 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்டுவந்த இருவழி சுரங்கத்தில், கடந்த 12-ஆம் தேதி திடீா் நிலச்சரிவு ஏற்பட்டு இடிந்தது.
சுரங்கப் பாதைக்குள் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா்.
சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க 51 மீட்டர் துளையிட வேண்டிய நிலையில், புதன்கிழமை நிலவரப்படி 45 மீட்டருக்கு துளையிடப்பட்டிருந்தது. தொடர்ந்து கிடைமட்டத் துளையிடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இடையில், தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் துளையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சில்க்யாரா பகுதியில், சுரங்கத்திற்கு அருகே ஆம்புலன்ஸ் உள்ளிட்ட முதலுதவி மருத்துவ உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் இன்று மீட்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், மருத்துவமனையில் 41 படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.