மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – மின்னஞ்சல் வழி அச்சுறுத்தல்!
மும்பை சர்வதேச விமானநிலையத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தலுடன் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளதாகவும் அதில் வெடிவிபத்தைத் தவிர்க்க 1 மில்லியன் டாலர்கள் பிட்காயின்களாக கேட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சஹர் காவல்துறை அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விமான நிலையம் மும்பை இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிட்டட் நிறுவனத்தால் இயக்கப்பட்டுவருகிறது. வியாழக்கிழமை காலை 11 மணியளவில் இந்த அச்சுறுத்தும் மின்னஞ்சல், வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த மின்னஞ்சலில் 48 மணி நேரத்தில் பணம் தராவிட்டால் விமான நிலையத்தின் இரண்டாம் முனையம் வெடித்துத் தகர்க்கப்படும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதுதான் கடைசி எச்சரிக்கை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 24 மணிநேரத்தில் மற்றொரு எச்சரிக்கை அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளாதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். கண்டுபிடிக்கப்படாத இந்த குற்றவாளியின் மீது 385 மற்றும் 505 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது