ஆயுதம் ஏந்தியோருக்கு புத்துயிர் கொடுக்கும் ரணிலின் ஆட்சிக்கு எதிராக அணிதிர வேண்டும் சிங்களவர்கள்! – பீரிஸ் அறைகூவல்.
டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் முக்கியஸ்தர் ஜி.எல்.பீரிஸ் , ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர்ந்தால், புலிகள் உயிர்த்தெழுவார்கள் எனவும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு அதனை பறைசாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
புலிகளை நினைவேந்தத் தமிழர்களுக்கு அனுமதி வழங்கிய ரணிலின் ஆட்சிக்கு முடிவுகட்டச் சிங்கள மக்கள் அணி திரள வேண்டும் என இனவாத சிந்தனையுடன் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த ஆட்சி தொடர்ந்தால் எமது படையினரால் சாகடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உயிர்த்தெழுவார்கள்.
அவர்களின் தனிநாட்டுக்கான போராட்டம் மீண்டும் ஆரம்பமாகும்.
எமது படையினரின் தியாகம் வீணாகிப்போகும் அளவுக்கு ரணிலின் ஆட்சி தற்போது மோசமடைந்துள்ளது.
வடக்கு, கிழக்கில் கடந்த மாதம் ‘மாவீரர் நாள்’ என்ற பெயரில் தமிழர்களால் அரங்கேற்றப்பட்ட நிகழ்வுகள் ரணில் அரசின் முழு அனுமதியுடன் தான் நடைபெற்றன.
மரணித்த புலிகளை நினைவேந்த அனுமதி வழங்கிவிட்டு அதில் பங்கேற்றவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரணில் அரசு நாடாளுமன்றத்திலும், வெளியிலும் கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையானது.
இப்படிக் கூறி சிங்கள மக்களை ஏமாற்றலாம் என்று ரணில் அரச தரப்பினர் தப்புக்கணக்குப் போடுகின்றனர்.
மைத்திரி – ரணில் தலைமையிலான அரசுதான் புலிகளை நினைவேந்த முதலில் அனுமதி வழங்கியது.
இப்போது ரணில், மொட்டுக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்து விட்டு மீண்டும் புலிகளைப் பகிரங்கமாக நினைவேந்த அனுமதி வழங்கியுள்ளார்.
எனவே, புலிகளை நினைவேந்தத் தமிழர்களுக்கு அனுமதி வழங்கிய ரணிலின் ஆட்சிக்கு முடிவுகட்டச் சிங்கள மக்கள் அணிதிரள வேண்டும்.” என்றார்.