தெலங்கானா பேரவையை அலங்கரிக்கப்போகும் 15 மருத்துவர்கள்
தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்கவிருக்கிறார். தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையவிருக்கிறது. புதிய பேரவையை 15 மருத்துவர்கள் எம்எல்ஏக்களாக அலங்கரிக்கவிருக்கின்றனர்.
தெலங்கானா சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களாகப் பதவியேற்கவிருக்கும் 15 மருத்துவர்களில் மூன்று பேர் எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்கள் ஆவர். பெரும்பாலானோர் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக இருப்பதாகவும், சிலர் மருத்துவத் துறை சார்ந்த தொழில்களை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த 15 மருத்துவர்களில் 11 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதும், மூன்று பேர் பாரதிய ராஷ்ட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் பாஜகவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி வியாழக்கிழமை பதவியேற்க உள்ளாா். முன்னதாக அவா் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோரை நேற்று சந்தித்திருந்தார்.
தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. இதையடுத்து அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட ரேவந்த் ரெட்டி, மாநில முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்கிறார். தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தோ்தலில் வெற்றிபெற்றால் தெலங்கானா அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்படும், ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும், விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000, விவசாயத் தொழிலாளா்களுக்கு ஏக்கருக்கு ரூ.12,000 வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்திருந்தது.
இதில் தெலங்கானா அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை அமல்படுத்தினால், பெண் பயணிகள் மூலம் ஆண்டுதோறும் கிடைக்கும் ரூ.2,500 கோடி வருவாயை மாநில அரசுப் போக்குவரத்து கழகம் இழக்க நேரிடும். ஏற்கெனவே ரூ.6,000 கோடி நஷ்டத்தில் இயங்கும் அரசுப் போக்குவரத்து கழகம், பெண் பயணிகளால் கிடைக்கும் வருவாயை இழக்க நோ்ந்தால், அந்த வருவாயை போக்குவரத்து கழகத்துக்கு மாநில அரசு வழங்கவேண்டிய நிலை ஏற்படும்.
இதேபோல விவசாயிகள் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமானால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் ரூ.35,000 லட்சம் கோடியை காங்கிரஸ் அரசு ஒதுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமானால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் அரசுக்கு சுமாா் ரூ.1 லட்சம் கோடி தேவை.
ஏற்கெனவே தெலங்கானாவுக்கு ரூ.5 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில், தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ரேவந்த் ரெட்டிக்கு சவால் காத்திருப்பதாக அரசியல் விமா்சகா்கள் தெரிவித்துள்ளனா்.