பரிசோதனை ரயில் மோதி ஒருவர் படுகாயம்.
புத்தளம் ரத்மல்யாய பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை சிறிய ரக லொறியொன்றுடன் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் ரயில் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலாவி ஹிஜ்ரத்புரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் தொழிலை மேற்கொள்ளும் குறித்த இளைஞன், இவ்வாறு சேகரித்த பொருட்களை பழைய பொருட்களை கொள்வனவு செய்யும் நிலையமொன்றுக்கு வழங்குவதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை குறித்த சிறிய ரக லொறியில் எடுத்துச் சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பரிசோதனை ரயில் ஒன்று குறித்த லொறி மீது மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்விபத்தில் குறித்த லொறி பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், லொறியின் சாரதியான இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.