ரணிலின் ஏமாற்று வித்தை அம்பலம்; புலிகளின் தீர்க்கதரிசனம் நிரூபணம் – கஜேந்திரகுமார் வெளிப்படைக் கருத்து.
“தமிழீழ விடுதலைப்புலிகள் 2005 ஆம் ஆண்டு, ரணில் விக்கிரமசிங்கவை நம்ப வேண்டாம் என்று தமிழ் மக்களிடம் தெரிவித்திருந்தனர். அப்போது இந்த உண்மையை விடுதலைப்புலிகள் சொன்னபோது தமிழர் ஆய்வாளர்கள் குழம்பினர். ஆனால், அன்று தீர்க்கதரிசனமாக விடுதலைப்புலிகள் தெரிவித்ததை இன்று ரணில் தன்னுடைய செயற்பாடுகளால் நிரூபித்துள்ளார். எனவே, தமிழ் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுகின்ற செயற்பாடுகளில் ஏனைய கட்சிகளும் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபடக்கூடாது என்று பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கின்றோன்.”
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊடக மையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த வியாழக்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்த்து ஏனைய தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்து நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் பேசியுள்ளார். புதிய நாடாளுமன்றத்தில்தான் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று ரணில் புதுப் பொய் கூறியுள்ளார்.
தீர்வுக்கான – நல்லிணக்கத்துக்கான இந்தப் பேச்சு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ரணிலால் ஆரம்பிக்கப்பட்டபோதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மக்களுக்குத் தெளிவாக ஒன்றை எடுத்துச் சொன்னது. அதாவது இது ரணிலின் நாடகம் என்று கூறியிருந்தோம். ரணில் ஒருபோதும் இனப்பிரச்சினையை நேர்மையாகத் தீர்க்கமாட்டார் என்றும் நாங்கள் சவால் விட்டிருந்தோம்.
கடந்த ஒன்றரை வருடங்களாக ரணில் சொன்ன பொய்களை நம்பி ஏமாறி இருக்கின்ற ஆட்கள், இந்தப் புதுப் பொய்யையும் நம்பி ஏமாறப் போகின்றார்களா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, இப்படிப்பட் ஒரு தெளிவான நிலைப்பாட்டை ரணில் அறிவித்ததன் பிறகாவது தமிழ் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுகின்ற செயற்பாடுகளில் ஏனைய கட்சிகளும் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபடக்கூடாது என்று பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
தயவு செய்து இனியாவது எடுக்கின்ற தமிழ் வாக்குகளுக்கு நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் என்று தமிழ் எம்.பிக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழினத்தைத் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ச தரப்பையும் தொடர்ந்து காப்பாற்றி வருகின்றார்.
அன்று ரணில் விக்கிரமசிங்கவை நம்ப வேண்டாம் என்று தமிழ் மக்களிடம் விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர். அப்போது இந்த உண்மையை விடுதலைப்புலிகள் சொன்னபோது தமிழர் ஆய்வாளர்கள் குழம்பினர். ஆனால், அன்று தீர்க்கதரிசனமாக விடுதலைப்புலிகள் தெரிவித்ததை இன்று ரணில் தனது செயற்பாடுகளால் நிரூபித்துள்ளார்.” – என்றார்.