காஸா போர் மாதக்கணக்கில் நீடிக்கும்: இஸ்ரேல்.
காஸா: காஸாவில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போர் மாதக்கணக்கில் நீடிக்கும் என்று இஸ்ரேலிய ராணுவத் தலைமை அதிகாரி ஹெர்ஸி ஹலேவி கூறியுள்ளார்.
டிசம்பர் 26ஆம் தேதி தொலைக்காட்சி வழியாக வெளியிட்ட அறிக்கையில் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.
காஸா எல்லைப் பகுதியில் மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ள வேளையில் அவரது கருத்து வெளியாகியுள்ளது.
“இதற்கு மாயவித்தை போன்ற தீர்வுகள் இல்லை. ஒரு பயங்கரவாத இயக்கத்தைக் குலைப்பதற்குக் குறுக்கு வழிகள் ஏதுமில்லை. வைராக்கியத்துடன் தொடர்ந்து போரிடுவதுதான் ஒரே வழி,” என்று திரு ஹலேவி குறிப்பிட்டார்.
கிறிஸ்துமசையொட்டி இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்தது. குறிப்பாக, காஸா எல்லைப்பகுதியை இரண்டாகப் பிரிக்கும் நீர்ப்பகுதிக்கு அருகே இஸ்ரேல் வலுவான தாக்குதலை மேற்கொண்டது.
முன்னதாக, பொதுமக்களை அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேலிய ராணுவம் வலியுறுத்தியது. பாதுகாப்பான இடம் என்று எதுவுமில்லை என்று குடியிருப்பாளர்கள் பலர் கூறியபோதும் ராணுவம் அவர்களை வலியுறுத்தியது.
இவ்வேளையில், “காஸாவின் மத்தியப் பகுதியில் இஸ்ரேலியப் படையினர் தொடர்ந்து குண்டுமழை பொழிவது கவலையளிக்கிறது. இதனால் கிறிஸ்துமசுக்கு முதல் நாளிலிருந்து 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்,” என்று ஐக்கிய நாட்டு நிறுவன மனித உரிமைகள் பிரிவுப் பேச்சாளர் கூறினார்.
“பொதுமக்களைப் பாதுகாக்க ஆன அனைத்து முயற்சிகளையும் இஸ்ரேலிய ராணுவம் மேற்கொள்ள வேண்டும். எச்சரிக்கை விடுத்தல், வெளியேற்ற உத்தரவு ஆகியவை மட்டுமே அனைத்துலக மனித உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்படும் கடமைகளை நிறைவேற்றியதாக கருதப்படாது,” என்றார் அவர்.
இஸ்ரேலிய ராணுவத்திற்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 11 வாரங்களாகப் போர் தொடரும் நிலையில், சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தி உலக நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால், ஹமாஸ் அமைப்பைத் துடைத்தொழிக்க உறுதிகொண்டுள்ளது இஸ்ரேல்.
பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு இருதரப்பும் ஒன்றை ஒன்று குறைகூறுகின்றன.
இந்நிலையில், மேலும் பல இடங்களில் இந்தப் போரின் தாக்கம் எதிரொலிப்பதாக அஞ்சப்படுகிறது.
டிசம்பர் 26ஆம் தேதி செங்கடலில் பயணம் செய்துகொண்டிருந்த கொள்கலன் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் மீதும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவ்விரு தாக்குதல்களுக்கும் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.
காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போருக்குப் பதிலடியாக தாக்குதல் நடத்துவதாக ஹவுதி அமைப்பு கூறியுள்ளது.
டிசம்பர் 25ஆம் தேதி, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் சிரியாவில் உள்ள ஈரானிய புரட்சிப் படையின் மூத்த தலைவர் உயிரிழந்தார்.
டிசம்பர் 26ஆம் தேதி, லெபனான் எல்லையில் உள்ள தேவாலயத்தின் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணை பாய்ச்சியதாக இஸ்ரேல் கூறுகிறது. இச்சம்பவத்தில் பொதுமக்களில் ஒருவரும் இஸ்ரேலியப் படையினர் ஒன்பது பேரும் காயமடைந்தனர்.
பன்முனைப் போர் நடப்பதாகவும் காஸா, லெபனான், சிரியா, மேற்குக் கரை, ஈராக், ஏமன், ஈரான் என ஏழு தரப்புகளின் தாக்குதல்களைச் சமாளிக்க வேண்டியிருப்பதாகவும் இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் கூறியிருக்கிறார்.