பிரதித் தலைவர் பிரச்சினையால் சிக்கலில் சஜித் – டலஸ் கூட்டணி.
2024 ஆம் ஆண்டில் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்குக் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூட்டணியை அமைப்பதற்கான அங்கீகாரத்தைக் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவில் மீண்டும் கோரியிருந்தார்.
இதற்கு முழுமையான அங்கீகாரம் மத்திய செயற்குழு வழங்கியிருந்த போதிலும் சில நபர்களை இணைத்துக்கொள்வதில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
மறுபுறம் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து சென்று சுயாதீனமாகச் செயற்படும் டலஸ் அழகப்பெரும, ஜீ.எல்.பீரிஸ், விமல் வீரவன்ச, சரித்த ஹேரத் மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட 13 பேர் கொண்ட குழுவுடன் கூட்டணி குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடி வருகின்றது.
இந்தக் கலந்துரையாடல்களின்போது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி அமைக்கப்படுகின்ற ஐக்கிய மக்கள் சக்தியை தலைமைத்துவமாகக் கொண்ட கூட்டணியின் பிரதித் தலைவர் பதவி டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவோ, அக்கட்சியின் ஏனைய சிரேஷ்ட தலைவர்களோ விரும்பவில்லை.
கூட்டணியில் பிரதித் தலைவர் பதவியைக் கோரி முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் நெருக்கடிகளைச் சந்தித்திருந்த நிலையில், தேசிய அமைப்பாளர் பதவியை டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி விருப்பம் தெரிவித்துள்ளது.
எனினும், இதனை டலஸ் அழகப்பெரும விரும்பாத நிலையில் கலந்துரையாடல்களில் பங்கேற்காமல் உள்ளார். ஆனால், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் தொடர்ந்தும் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.