இந்தியாவிலேயே பெண்களுக்கான சிறந்த நகரங்கள் சென்னை, திருச்சி: ஆய்வில் தகவல்
2023-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே பெண்களுக்கான 10 சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை மற்றும் திருச்சி வெவ்வேறு பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
தனியார் நிறுவனமான அவதார் குழுமத்தின் சார்பில், இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த 10 நகரங்கள் – 2023 என்ற அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு, மக்கள் அளித்த மதிப்பெண்களின்படி வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கென, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களை ஒரு பிரிவாகவும், 10 லட்சத்துக்கும் குறைவான நகரங்களை ஒரு பிரிவாகவும் கொண்டு கடந்த ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் வரையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாடு முழுவதும் 113 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள நகரங்கள் பிரிவில், 49 நகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. 100-க்கு 48.42 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. 9-ஆவது இடத்தில் கோவை, 11-ஆவது இடத்தில் மதுரை இடம் பிடித்துள்ளன.
இதேபோல, 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகையுள்ள நகரங்கள் வரிசையில், 64 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் திருச்சி முதலிடம் பிடித்துள்ளது. 100-க்கு 40.39 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. 2-ஆவது இடத்தில் வேலூர், 6-ஆவது இடத்தில் சேலம், 7-ஆவது இடத்தில் ஈரோடு, 8-ஆவது இடத்தில் திருப்பூர், 10-ஆவது இடத்தில் புதுச்சேரி, 29-ஆவது இடத்தில் திருநெல்வேலி, 30-ஆவது இடத்தில் தஞ்சாவூர், 31-ஆவது இடத்தில் தூத்துக்குடி, 33-ஆவது இடத்தில் திண்டுக்கல் இடம்பெற்றுள்ளது.
பெண்களுக்கான சமூக உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டும், தொழில்துறை உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக உள்ளடக்கத்தில் நகர வாழ்வாதாரம், பாதுகாப்பு, பெண்களுக்கான பிரதிநிதித்துவம், பெண்களுக்கு அதிகாரம், பெண்களுக்கான வாகனச் சேவை, காவல் துறையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம், கல்வியறிவு, பெண்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதில், சென்னைக்கு 53.1 மதிப்பெண், திருச்சிக்கு 52.8 மதிப்பெண் கிடைத்துள்ளது. தொழில் துறையில் மகளிர் சேர்க்கையில் சென்னைக்கு 52.8 மதிப்பெண், திருச்சிக்கு 13.4 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது பொதுப் போக்குவரத்து, வாழ்வாதாரத்துக்கான செலவு, வெளிச்சமயமான சாலைகள், சிசிடிவி கேமரா கண்காணிப்பு, அரசின் முயற்சிகள் குறித்த விழிப்புணர்வு, சமூகக் கட்டுப்பாடுகள் இரவு நேரப் பயணம், பெண்கள் குறித்து பொதுமக்களின் கருத்து, குழந்தைகளுக்கான கல்வி வசதி, மருத்துவ வசதிகள், பெண்களுக்கான கல்வி வசதிகள், வேலைவாய்ப்புகள், குழந்தைகள் பாதுகாப்பு, காப்பகங்கள், பொழுதுபோக்கு வசதிகள், பாதுகாப்பு, வீட்டு வசதிகள், வாழ்க்கைத் தரம், இயக்கம் மற்றும் போக்குவரத்து வசதிகள், குடும்பங்களுக்கு கிடைக்கும் உதவிகள், பெண்களுக்கான விடுதிகள், ஹோட்டல்கள், தற்காலிக தங்குமிட வசதிகள், தொழில்முறை திறன் உருவாக்கலுக்கான அணுகு முறைகள், பசுமை இடங்கள், அரசு அமைப்புகளின் செயல்திறன், பெண் காவல் அதிகாரிகள், சட்ட அமலாக்கம், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு வசதிகள், பணியிடங்களில் பாலின சமத்துவம், சமூக மாற்றம் ஆகிய காரணிகளை உள்ளடக்கியும் ஆய்வு செய்து இந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நடைபெற்ற கள ஆய்வில் சேகரிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்தியாவிலேயே பெண்களுக்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் திருச்சியும், சென்னையும் முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் என்.காமினி கூறியது: மாநகரில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் தேவைக்கேற்ப ஆண்டுதோறும் அதிகளவில் பொருத்தப்படுகிறது.
மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட அரசின் பல்வேறு மகளிர் திட்டங்களும் பெண்களுக்கான தேவையை பல்வேறு நிலைகளில் பூர்த்தி செய்கின்றன. இந்தப் பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் வரிசையில் திருச்சி முதலிடம் பிடித்திருப்பது பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
திருச்சி மாநகராட்சி ஆணையர் இரா. வைத்திநாதன் கூறியது: குழந்தைகள், பெண்கள், முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லங்களும் மாநகரில் சிறப்பாக இயங்கி வருகின்றன. திருச்சி மாநகராட்சி மட்டுமின்றி, மாநகர காவல் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றியதாலேயே பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் திருச்சி முதலிடம் வந்துள்ளது என்றார்.