ஜெனிற்றாவை விடுதலை செய்! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்
புதிய வருடத்தில் வவுனியாவுக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்க முற்பட்ட போது, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட, பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களைக் கண்டறியும் போராட்டத்தை முன்னெடுத்து வரும் தமிழ்த் தாயின் விடுதலையை வலியுறுத்தி வன்னியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கங்களின் தாய்மார், நேற்று முல்லைத்தீவு புனித பேதுரு தேவாலய முன்றலில் ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்து மாவட்ட செயலாளர் அலுவலகம் வரை சென்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவியின் விடுதலைக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நான்கு நாள் பயணமாக வடக்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த வெள்ளிக்கிழமை, வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தபோது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஜனாதிபதியைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்து நகர மண்டபத்துக்கு அருகில் வந்த வேளை பொலிஸார் தடுத்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் வவுனியா மாவட்ட செயலாளர் சிவானந்தன் ஜெனிற்றா வவுனியா நகர மண்டபத்துக்குள் செல்ல முற்பட்டபோது, அவரையும், போராட்டத்தை வீடியோ எடுத்த மீரா ஜஸ்மினையும் பொலிஸார் கைது செய்தனர்.
இருவரையும் அன்றைய தினம் பொலிஸார் வவுனியா நீதிவான் முன்னிலையில் முற்படுத்தியபோது, மீரா ஜஸ்மினைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிவான், சிவானந்தன் ஜெனிற்றாவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டனர்.
போராட்டங்கள் நடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், சிவானந்தன் ஜெனிற்றாவுக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்றிருந்த நிலையில், அதை மீறி அவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அவரின் கைதுக்கு எதிராக முல்லைத்தீவில் நேற்றுப் பிற்பகல் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த தமிழ் தாய்மார்கள், அப்பகுதியில் பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல், பொலிஸாரின் அராஜகத்தை நிறுத்துமாறும், ஜெனிற்றாவை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தினர்.
“பாதிக்கப்பட்ட உறவு ஜெனிற்றாவை விடுதலை செய், சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு, ரணில் அரச, நட்டஈடு வழங்கி போராட்டங்களை நிறுத்தலாம் கனவு காணாதே” போன்ற கோஷங்களை எழுப்பியும், பதாதைகளைத் தாங்கியவாறும் தமிழ்த் தாய்மார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரும் போராட்டத்தை 2 ஆயிரத்து 500 நாள்களைக் கடந்து தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் தாய்மார், 14 வருடங்களுக்கு மேலாகக் காணாமல்போயுள்ள தமது அன்புக்குரியவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு ஒரே குரலாககே கோரிக்கை விடுத்துள்ளனர்.