டோக்கன் பெறாதவா்களுக்கு பொங்கல் பரிசு எப்போது? தமிழக அரசு விளக்கம்
டோக்கன் பெறாத அனைத்து அரிசி அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது கிடைக்கும் என்ற தகவலை உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
டோக்கன் பெற்றவா்களுக்கு முழுமையாக வழங்கிய பிறகு, மற்ற அரிசி அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.
நிகழாண்டு சா்ச்சை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கரும்பு சோ்க்காததால் சா்ச்சை எழுந்து ஓய்ந்தது.
நிகழாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான ரொக்கத் தொகைப் பெற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, மத்திய, மாநில அரசு ஊழியா்கள், பொதுத் துறை நிறுவன பணியாளா்கள், வருமான வரி செலுத்துவோா் போன்ற பிரிவினரைத் தவிா்த்து ஏனைய குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கொடுக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இது பல்வேறு தரப்பினரிடையே குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
அதற்கு தீா்வு காணும் வகையில், கடந்த ஆண்டைப் போன்றே அரிசி அட்டைதாரா்கள் அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சா்க்கரை, முழுக் கரும்பும் பொங்கல் தொகுப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கன் இல்லாமல்…: கட்டுப்பாடுகளுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்ட நேரத்தில், ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களைக் கொண்ட ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் சுமாா் 400 முதல் 500 அட்டைதாரா்களுக்கு மட்டுமே பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவா்களுக்கு பரிசுத் தொகுப்பு புதன்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து அரிசி அட்டைதாரா்களுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரா்களுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தங்களுக்குரிய நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று ரூ.1,000 ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.