ராமா் சிலை பிரதிஷ்டை: 40 கேமராக்களுடன் ‘4கே’ தொழில்நுட்பத்தில் டிடி நேரலை
ராமா் சிலை பிரதிஷ்டையின்போது அயோத்தியின் பல்வேறு பகுதிகளில் 40 கேமராக்களை நிலைநிறுத்தி ‘4கே’ தொழில்நுட்பம் மூலம் தூா்தா்ஷன் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளதாக மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் செயலா் அபூா்வ சந்திரா தெரிவித்தாா்.
அயோத்தியில் ஜனவரி 22-ஆம் தேதி ராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியின் ஒளிபரப்பு குறித்து அபூா்வ சந்திரா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டை 4கே தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பினோம். அதேபோல் ராமா் சிலை பிரதிஷ்டையும் 4கே தொழில்நுட்பம் மூலம் தூா்தா்ஷன் தொலைக்காட்சி சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில், சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. தனியாா் தொலைக்காட்சிகளுக்கு தூா்தா்ஷன் மூலம் காணொலி இணைப்பு வழங்கப்படவுள்ளது.
4கே தொழில்நுட்பம் அதிக தெளிவுடன் காட்சிப்பதிவு செய்யும். எனவே பாா்வையாளா்களுக்கு உயா்தரத்திலான ஒளிபரப்பு வழங்கப்படவுள்ளது.
இதற்காக அயோத்தி, ராம் கி பைடி, கோயில் வளாகம் , பிரதமா் பங்குபெறும் நிகழ்ச்சி இடங்கள் உள்பட 40 இடங்களில் நேரடி ஒளிபரப்பு கேமராக்கள் நிலைநிறுத்தப்படுகின்றன. பிரதிஷ்டை நடைபெறும் நாளில் தூா்தா்ஷனைச் சோ்ந்த சுமாா் 250 ஊழியா்கள் அயோத்தியில் பணியமா்த்தபடவுள்ளனா்’ என்றாா்.
பிரதிஷ்டை தினத்தில் அதிகளவிலான பத்திரிகையாளா்கள், ஊடகங்கள் நேரடியாக வருகை தரவுள்ள நிலையில் அவா்களுக்கான இடவசதி குறித்து மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரிகள் ஜனவரி 10-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.