எமது ஆட்சியில் , ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கலைக்கப்படும் – அணுரகுமார.
அரசியல் வாதிகளின் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்வதை அடுத்து தெரிவு செய்யப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தடுத்து நிறுத்தும் என அக்கட்சியின் தலைவர் அணுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு பேணப்பட்டு வரும் பாரிய பாதுகாப்பு களையப்பட்டு , தற்போது பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த வாகனங்கள் கைவிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்ட தேசிய மக்கள் சக்தி பெண்கள் சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான இராணுவ மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், சில கிராமிய பொலிஸ் நிலையங்களில் பத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாத்திரமே இருப்பதாக அவர் கூறினார்.
ஜனாதிபதி வெளியேறியதும் ஜனாதிபதியின் பாதுகாப்பு கலைக்கப்பட்டு, அவர்களை கிராமிய பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல்வாதிகள் பயன்படுத்தும் வாகனங்களின் எரிபொருள் திறன் ஒரு லீற்றருக்கு இரண்டு முதல் மூன்று கிலோமீற்றர்கள் எனத் தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அவ்வாறான வாகனங்களின் பாவனை கைவிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் படையினால் ஆட்சி அமைப்பது போராட்டத்தின் முடிவல்ல நாட்டைக் கட்டியெழுப்பும் போராட்டத்தின் ஆரம்பம் என அவர் மேலும் தெரிவித்தார்.