9 நாள்களில் மாத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை! – தென்னிலங்கையில் தொடரும் பயங்கரம்.
இலங்கையில் ஜனவரி 15 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான 9 நாள்களுக்குள் 8 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் ஜனவரி 15 ஆம் திகதி இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஓட்டோவில் இருந்த இருவரே துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச் சென்றனர்.
‘படா ரஞ்சி’ என அழைக்கப்படும் செந்தில் ஆறுமுகன் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இது பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலாகக் கருதப்படுகின்றது.
சுட்டுக்கொல்லப்பட்டவர் இந்தியாவில் தலைமறைவாகியுள்ளார் எனக் கூறப்படும் பாதாளக் குழு உறுப்பினர் பூகுடு கண்ணாவின் உதவியாளராகச் செயற்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
ஜனவரி 20 ஆம் திகதி மாத்தறையில் 24 வயது இளைஞர் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
அதேவேளை, ஜனவரி 22 ஆம் திகதி அபே ஜனபலவேகய கட்சியின் தலைவர் உட்பட ஐவர் பெலியத்தயில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுவும் பாதாளக் குழு மோதலாகக் கருதப்படுகின்றது.
கம்பஹா, கஹடான கணாராம விகாரையில் நேற்று நண்பகல் பௌத்த தேரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். காணிப் பிரச்சினையொன்றை அடிப்படையாகக்கொண்டு இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
மேற்படி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.