தான் பதவி விலக கோமாளிகளே காரணம் என்கிறார் கோட்டா! மக்களின் ஆதரவு இன்னமும் உண்டு!! – எனினும் மீண்டும் அரசியலில் குதிப்பது குறித்து முடிவில்லையாம்.
“நாட்டு மக்களின் அமோக வாக்குகளாலேயே நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டேன். சிலரின் கோமாளித்தனமான செயற்பாடுகளால்தான் ஜனாதிபதிப் பதவியில் இருந்து நானாகவே விலகியிருந்தேன். மக்களின் ஆதரவு இன்னமும் எனக்கு இருக்கின்றது. எனினும், ஓய்வு நிலையில் இருக்கும் நான் மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆண்டு. அதனால் புதிய கூட்டணிகள் தொடர்பான அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கூட்டணிகள் தொடர்பில் சிலர் என்னுடனும் பேசியுள்ளனர். எனினும், எந்தக் கூட்டணியுடனும் இணைவது தொடர்பில் நான் முடிவு எடுக்கவில்லை.
நாட்டின் சமகால அரசியல் நிலைவரத்தை நான் உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன். பலத்த சவாலுக்கு மத்தியில் நாட்டின் முன்னேற்றத்துக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அயராது பாடுபடுகின்றார்.
இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றே தீரவேண்டும். அதை ஒத்திவைக்கும் எண்ணம் எவருக்கும் இருக்கக்கூடாது.” – என்றார்.