பாடசாலைக்கு அருகே இருந்த பாரிய ஆலமரக்கிளை பலத்த காற்றினால் முறிந்துள்ளது..

கிளிநொச்சி நகரில் பலத்த காற்றினால் பல பகுதிகளிலும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது. கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு அருகில் ஆலைமரத்தின் பாரிய கிளை ஒன்று முறிந்து விழுந்தமையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றுமுதல் பலத்த காற்று வீசி வருகின்றது. இன்று வழமைக்கு அதிகளவான காற்று வீசியமையால் பல பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு அருகில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் காணப்பட்ட ஆலமரத்தின் பாரிய கிளை ஒன்று வீசிய பலத்த காற்றினால் முறிந்து விழுந்துள்ளது.
குறித்த நேரத்தில் பாடசாலை இடம்பெற்றுக் கொண்டிருந்தமையால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. குறித்த மர நிழலிலேயே அதிகளவான மாணவர்கள் பெற்றோருக்காக காத்திருப்பது வழமையான செயற்பாடாகும். இந்த நிலையில் குறித்த மரக்கிளை அகற்றப்படாமையால் குறித்த வீதி ஊடாக வட்டக்கச்சி செல்லும் வீதி தடைப்பட்டது.
இதேவேளை குறித்த கிளை அகற்றப்படாத நிலையில் பாடசாலை நிறைவடைந்து மாணவர்களை பாதுகாக்க படையினர் பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகம் இணைந்து செயற்பட்டனர். குறித்த வீதியின் போக்குவரத்தினை சீர் செய்வதிலும் மாணவர்களை பாதுகாப்பதிலும் துரிதமாக படையினர் செயற்பட்டிருந்தனர்.
குறித்த பாடசாலையில் 2400க்கு மேற்பட்ட மாகாணவர்கள் கல்வி கற்றுவரும் சூழலில் ஆபத்தான மரங்கள் அப்பகுதியில் இருப்பது தொடர்பில் தொடர்ச்சியாக பாடசாலை சமூகத்தினால் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என பாடசாலை சமூகம் தெரிவிக்கின்றது.
ஆபத்தான மரங்கள் மற்றும் கிளைகளை அகற்றி பாடசாலை மாணவர்களிற்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருமாறு பெற்றோர் மற்றம் பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.