தியாகச் சுடரேற்றுதல் : – சிக்மலிங்கம் றெஜினோல்ட்
முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு (1987.09.15) முன்பு இதே காலப்பகுதியில் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து ஒரு இளைஞர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். அது சாகும்வரையிலான உண்ணாவிரதம். அவர் சொன்னதைப்போலவும் அவர் ஆரம்பித்ததைப்போலவும் அது “மெய்யான உண்ணாவிரதமாகவே” முடிந்தது. அதுவே பிறகு ஒரு வலிமிக்க, வலிய வரலாறு என ஆகியும் விட்டது.
அது “சொல் ஒன்று செயல் வேறொன்று” என்ற நாடகீயமான காலமல்ல. அப்படியான முரண்பாடுகளைக் கொண்ட மனிதர்கள் அரங்கில் தலையெடுத்திருக்காத காலம். அல்லது அப்படியானவர்கள் புறமொதுக்கப்பட்டிருந்த காலம். “சொல்லும் செயலும் ஒன்றே. செயலே சிறந்த சொல்” என்ற மகத்தான மனிதர்களால் நிறைந்திருந்த காலம். அதனால்தான் அந்த இளைஞர் சொன்னதைப்போல – அவர் மக்களுக்கு வாக்குறுதி அளித்ததைப்போல சாகும்வரையிலான உண்ணாவிரதத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வரலாறாகினார்.
இவ்வளவுக்கும் அவர் முன்வைத்திருந்த கோரிக்கைகள் ஒன்றும் இன்றைய நிலையில் பெரியவையல்ல. அந்தக் கோரிக்கைகள் இவைதான்.
1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
அன்றைய சூழலில் இவை முக்கியமானவையாகத் தோன்றியிருக்கக் கூடும். அப்படித்தான் உணரப்பட்டதும் கூட.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் சிறியவையோ பெரியவையோ என்பது ஒரு பக்கமிருக்கட்டும். அவற்றை வலியுறுத்தி, அவற்றுக்காகத் தன்னை அர்ப்பணித்து சாகும்வரையிலும் ஒருவர் உண்ணாவிரதமிருந்தாரே, இறுதிவரையில் அந்தப் போராட்டத்தில் உறுதியாக இருந்து மரணத்தைத் தழுவிக் கொண்டாரே அதுவே முக்கியமானது. அந்த உறுதிப்பாடும் தான் முன்னெடுத்த போராட்டத்திற்கு அவர் அளித்த விசுவாசமும் நேர்மையுமே முக்கியமானது. வரலாறு இதையே தன்னுடைய மனதில் எடுத்துக் கொண்டது. அதனால்தான் திலீபன் இன்றும் நினைவிலுள்ளார். அழியாத நினைவாக. அதனால்தான் வியத்தகு போராளியாக ஒளியைப்பெற்றார்.
இப்போது நாங்கள் திலீபனை நினைவு கூர்வதென்பது அவருடைய அந்த உறுதிப்பாட்டுக்கும் தியாகத்துக்கும் மதிப்பளிப்பதாகவே இருக்க வேண்டும். அதுவே மெய்யான அஞ்சலி. அதுவே மெய்யான மதிப்பளிப்பு. அதுவே அவருடைய போராட்டத்திலிருந்து நாம் படித்துக் கொள்ளவேண்டிய நமக்கான வரலாற்றுப்பாடமும் அரசியற்பாடமுமாகும். அதைச்செய்வதே திலீபனை நினைவு கொள்வதற்கான நம்முடைய தகுதியாக அமையும்.
இதேவேளை இப்படி ஒவ்வொரு கோரிக்கைக்காகவும் நாம் உயிரை ஈந்து கொள்ளத்தான் வேண்டுமா? அதைத் தவிர வேறு வழியே இல்லையா? என்று யாரும் கேட்கலாம்.
உயிரை மாய்த்துத்தான் போராட வேண்டும் என்றில்லை. ஆனால், குறைந்தபட்சம் நாம் முன்வைக்கும் கோரிக்கைக்கு விசுவாசமான முறையில் போராட வேண்டும் என்பது அவசியமல்லவா! அப்படிச்செய்தால் மட்டுமே அந்தப் போராட்டங்களுக்குப் பெறுமதியிருக்கும். மதிப்பிருக்கும். அவற்றுக்குரிய வலிமை கிட்டும்.
திலீபனுக்கு முன்பும் பின்பும் எத்தனையோ உண்ணாவிரதப்போராட்டங்களை எத்தனையோ பேர் முன்னெடுத்திருக்கிறார்கள். மட்டக்களப்பைச் சேர்ந்த பூபதி அவர்களில் ஒருவர். இந்த இருவரையும் தவிர, ஏனையவை அத்தனையும் நாடகீயத்தனமான உண்ணாவிரதப் போராட்டங்களாகவே இருந்திருக்கின்றன. அதனால்தான் எடுத்ததற்கெல்லாம் உண்ணாவிரதப் போராட்டம் என்று சொல்வதைக் கேட்கும்போது நமக்குச் சிரிப்பும் எரிச்சலும் பொத்துக் கொண்டு வருகிறது.
திலீபன் உண்ணாவிரதம் இருந்த காலத்தில் இருந்தவர்களுக்கு இந்த நாடகீயத்தனங்களைக் காணும்போது ரத்தம் கொதிப்பேறுவதைத் தவிர்க்க முடியாது. அன்றைய நாட்களைத் தெரிந்தவர்கள் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். எத்தகைய பெரிய மக்கள் எழுச்சியை, மக்கள் உணர்வை திலீபன் உருவாக்கினார் என்பதை. திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் திரண்டு கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் எத்தகைய உணர்ச்சிக் கொந்தளிப்போடிருந்தனர் என்பதை. அந்தப் பன்னிரண்டு நாட்களும் ஒவ்வொரு ஊர்களிலிருந்தும் திரண்டு நல்லூரை நோக்கி வந்து கொண்டிருந்த மக்கள். சிறியவர்கள், பெரியவர்கள். ஆண்கள், பெண்கள், முதிய தாய்மார், தந்தையர்கள், மாணவர்கள்….
மட்டுமல்ல, ஊர்களிலெல்லாம் அடையாள உண்ணா விரதங்கள் நடந்தன. திலீபனுக்கு ஆதரவாக, அவர் முன்வைத்த கோரிக்கைக்கு ஆதரவாக. அவருடைய போராட்டத்துக்கு ஆதரவாக. இது யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கடந்து வன்னி, கிழக்கு என அந்த நெருப்புப் பற்றிப் படர்ந்தது. அது ஒரு தியாகச் சுடராக எங்கும் எரிந்து கொண்டிருந்தது.
திலீபனுடைய கோரிக்கைகள் அன்று நிறைவேறவில்லைத்தான். ஆனால், அன்றைய அரசியல் அதிகாரத் தரப்புகளின் மேலாதிக்கத்திரை அம்பலப்படுத்தப்பட்டது. இலங்கை – இந்திய உடன்படிக்கையின் சூக்குமங்களில் புதைந்திருந்த சூழ்ச்சிகளும் நலனோக்குகளும் வெளிப்படுத்தப்பட்டன.
இதற்காக ஒரு உயிரைப் பலியிடலாமா? அதுவும் பசியினால் வதங்கி இப்படி அழியத்தான் வேண்டுமா என்ற வரலாற்றுக் கேள்வி அன்றும் இன்றும் உள்ளது. திலீபன் உண்ணாவிரதம் இருந்த போதே இந்த விவாதங்கள் ஒரு பக்கத்திலிருந்தன. ஏன் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குள்ளேயே இத்தகைய கேள்விகள் இருந்தன. விவாதங்கள் நிகழ்ந்தன. திலீபன் உண்ணா விரதம் இருப்பதாகத் தீர்மானித்தபோது இது நிச்சயமாக உயிரிழப்பில்தான் முடியும் என்றே புலிகளில் சிலரும் புலிகளுக்கு நெருக்கமாக இருந்த சிலரும் எச்சரித்திருந்தனர். இப்படியாகத்தான் முடிவு அமையும் என்று தெரிந்து கொண்டே திலீபன் தன்னுடைய போராட்டத்தை ஆரம்பித்தார். திலீபனின் இந்த முடிவு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாரகனுக்குக் கூட ஆரம்பத்தில் ஏற்புடையதாக இருக்கவில்லை. ஆனால், அந்த முடிவைத் தடுக்கக் கூடிய சூழலும் புலிகளுக்கு அன்றிருக்கவில்லை என்பது புலிகளுடைய போராட்ட முறைமையோடும் அன்றைய அந்தக் களச்சூழலோடும் சேர்த்துப் புரிந்துகொள்ளப்பட வேண்டியது.
இன்று திலீபன் முன்வைத்த எளிய கோரிக்கைகளை விடவும் மிகப் பெரிய கோரிக்கைகள் விளைந்து போய்க்கிடக்கின்றன.அன்றைய நெருக்கடியை விடவும் மிகப் பெரிய நெருக்கடிகளை முறியடிக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்குப் பிறகான முப்பத்து மூன்று ஆண்டுகளும் மிக உக்கிரமானவை. அதிலும் முள்ளிவாய்க்கால் நெருக்கடி என்பது இதில் உச்சம். இருந்தும் அத்தகைய வலிமையான, உறுதியான போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய வல்லமைகள் என யாரும் பின்வந்த நாளில் இல்லை.
அன்று திலீபனுடைய போராட்டத்தைக் கண்ணால் கண்டவர்களும் அருகே கூட இருந்தவர்களும் இன்று செய்வது அறியாமல் வரலாற்றின் இடுக்கினுள் சிக்கியுள்ளனர். அன்றைய இளையோர் இன்று வளர்ந்து போராடும் நிலையில் உள்ளனர். ஆனாலும் எவருக்கும் எதை எப்படிச் செய்வதென்று தெரியாமலே உள்ளது. இது ஒரு கொடுநிலை.
இப்பொழுது நடந்து கொண்டிருப்பது அந்த நாட்களை நினைவு கூர்வது மட்டுமே என்றாகி விட்டது. அதிலும் கூட ஆயிரமாயிரம் சிடுக்குகள். சில்லெடுப்புகள். ஒரு போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது என்ற வழிமுறையைக் கூட கண்டறிய முடியாதளவுக்கு நம்முடைய அரசியற் களம் சிதைந்து போய்க்கிடக்கிறது. இது தனியொருவருடைய குற்றமல்ல. வரலாற்று நெருக்கடிகளின்போது இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதுண்டு. எதிர்ச்சக்திகள் இதையே செய்யும். நமக்கு நேர்ந்திருப்பதும் இதுதான். ஆனால், இதை நாம் கடந்த செல்ல வேண்டும். அதற்கான அறிவுக்கண் நமக்கு வேண்டும். அதற்கான திடகாத்திரமான சிந்தனை வேண்டும். திலீபன் அதையே நம்மிடம் கோருகின்றார். அவருடைய இந்த நினைவுக் காலம் அதையே நம்மிடம் வேண்டி நிற்கிறது.
திலீபனை அறிந்தோரும் தெரிந்தோரும் அவரை மதிப்போரும் அவருடைய போராட்டத்தை அங்கீகரிப்போரும் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு விசுவாசமான மக்கள் அரசியற் போராட்டத்தை ஆரம்பிப்பதே. அதற்காகத்தம்மை அர்ப்பணிப்பதே. அதில் அவரைப் போல உறுதியோடு நிற்பதே. அதன் மூலம் எதிர்த்தரப்புகளுக்கு நெருக்கடிகளை உருவாக்குவதே. முன்னோடிகள் எப்போதும் நமக்கு சில வழிகளையேனும் காண்பிக்கிறார்கள். அதை நாம் நமக்கென வடிவமைக்கும்போதே அவர்களுக்கான மதிப்பை அளிக்க முடியும்.
வரலாற்றின் துயரத்தைப் பாருங்கள். திலீபன் அன்று முன்வைத்த ஐந்து கோரிக்கைகளில் –
1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
என்ற நான்கும் அப்படியேதான் உள்ளன. இதில் நான்காவதை இராணுவமுகாம்கள் என்று மாற்றிக் கொள்ள வேண்டும். இதை விட இன்னும் பல கோரிக்கைகளை நாம் இன்று சேர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. காணாமலாக்கப்பட்டோர், போரினால் பாதிக்கப்பட்டோர், போர்க்குற்றவாளிகளை விசாரிப்பது, பௌத்த அடையாளங்களை வடக்குக் கிழக்கில் வலிந்து நிறுவுதல், கடலோரங்களை சிங்கள ஆதிக்கத்திலிருந்து பாதுகாப்பது எனப் பல. அத்தனையும் எரிதணல் போன்றவை.
இதற்கெல்லாம் என்ன செய்யப்போகிறோம்?
திலீபனை நினைவு கூர்வதென்பது, அவருடைய உறுதியோடு மக்களின் நெருக்கடிகளைத்தீர்ப்பதற்கான போராட்டங்களை, மக்கள் பங்கேற்போடு நடத்துவதேயாகும். அதுவே அவருக்கான மெய்யஞ்சலி. மாறாக வெறும் நடைபவனிகளோ, புகழுரைகளோ தெருவிளக்கேற்றுவதோ மட்டுமல்ல. வரலாறும் இந்தக் காலமும் வேண்டுவது வேறு. அது திலீபன் காட்டிய தியாகச் சுடரேற்றுதலையே.