தமிழ்க் கூட்டமைப்பை விரைவில் சந்திக்கும் முற்போக்குக் கூட்டணி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் விரைவில் நடைபெறவுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெறுவதற்குத் தேசிய மட்டத்தில் ஓரணியில் திரண்டு செயற்படுவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
அத்துடன் ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் தமிழ் முற்போக்குக் கூட்டணி இது விடயம் சம்பந்தமாக பேச்சு நடத்தும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, ‘தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்’ அமைப்பதற்கு முன்வரவேண்டும் என்ற அழைப்பை எட்டாவது நாடாளுமன்றத்திலேயே கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதன்போது இவ்விவகாரம் பற்றியும் பரீசிலிக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.