மனோவின் பிள்ளையார் சுழி கதை கேட்டால் பிள்ளையாரே அழுது விடுவார் – சபையில் ஜீவன் கிண்டல்
“தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இந்த 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்திற்கு நான்தான் பிள்ளையார் சுழி போட்டேன் என ஒரு அறிக்கை விட்டிருந்தார். இதனைப் பிள்ளையார் கேட்டால் அவரே அழுவார். பெயர் போடும் அரசியல் செய்ய நான் வரவில்லை. நிரந்தரத் தீர்வுகளைப் பெறவே நான் அரசியலுக்கு வந்தேன்.”
– இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற பிணைப் பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல் – வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கை பொறுப்பு பற்றுச்சீட்டுகள் (திருத்தச்) சட்டமூலம் உள்ளிட்ட 9 சட்டமூலங்கள் மீதான இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது,
“இந்திய அரசு மூலம் எமக்கு கிடைத்த வீட்டுத் திட்டத்தை கடந்த 19 ஆம் திகதி நம் அமுல்படுத்தினோம். 43 வீட்டுத் திட்டங்களில் 1300 வீடுகளை அறிமுகப்படுத்தினோம். இது 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் முதல் கட்டம். இந்தத் திட்டம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதில் நாம் கட்சி பார்த்து வீடு கொடுப்பதாக சிலர் கூறியிருந்தார்கள். ஆனால், நாங்கள் இன்னும் பயனாளிகள் பட்டியலையே .அறிவிக்கவில்லை. அறிவிக்காத பட்டியலுக்கு எப்படி கட்சி பார்த்து வீடு கொடுக்க முடியும்?
எந்த அரசில் கட்சி பார்த்து யார் யாருக்கு வீடுகள் கொடுக்கப்பட்டன என்பது இங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் நன்றாகவே தெரியும். இங்கு அமர்ந்திருக்கும் வேலுகுமார் எம்.பிக்கும் நன்கு தெரியும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு வீடு கொடுக்குமாறு நான் கேட்கவில்லை. 2012 – 2019 இல் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கொடுங்கள் என்றுதான் கூறினேன். எனது கட்சிக்காரர்களுக்கு கொடுங்கள் என்று கூறும் புத்தி எனக்கு கிடையாது.
பயனாளிகள் பட்டியலில் தோட்டத்திலுள்ள சேவையாளர்களுக்கு வீடு கொடுக்க வேண்டும் என்று பெரும்தொட்டத்தொழில் அமைசசராக இருந்த ரமேஷ் பத்திரவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அவர்களையும் நாம் உள்ளடக்கியுள்ளோம்.
அதுமட்டுமன்றி அங்கேயே படித்துச் சேவை செய்யும் ஆசிரியர்களுக்கு வீடு வழங்கக் கோரியுள்ளோம். மலையகக் கலைஞர்களுக்கும் வீடு கேட்டுள்ளோம். அடுத்ததாக தோட்டத்தில் வேலை செய்தால் வீடு கிடையாது. தோட்டத்தில் பிறந்திருந்தால்தான் வீடு என்ற கொள்கையை உருவாக்கினோம். 2 இலட்ச்சத்து 51 ஆயிரம் குடும்பங்கள் தோட்டத்தில் வாழ்கின்றன.
இதில் ஒரு இலட்சத்து 76 ஆயிரம் குடும்பங்களுக்கு வீட்டுப் பிரச்சினைகள் உள்ளன. இவ்வாறான நிலையில் தோட்டத்தில் வேலை செய்வது ஒரு இலட்சத்து 15 ஆயிரம் நபர்கள் மட்டும்தான். இன்று (நேற்று) வலப்பனையில் கூட தங்களுக்கு வீடு கிடைக்கவில்லையென ஒரு போராட்டம் நடந்தது. இந்திய அரசால் கிடைத்துள்ள வீடுகளின் எண்ணிக்கை 14 ஆயிரம். அவற்றை முறையில் நாம் பகிர்ந்தளிக்க வேண்டும். ஒரு இலட்சத்து 76 ஆயிரம் குடும்பங்களின் வீட்டுப் பிரச்சினையை இந்த 14 ஆயிரம் வீடுகள் தீர்க்கப்போவதில்லை.
இந்நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், “இந்த 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்துக்கு நான்தான் பிள்ளையார் சுழி போட்டேன்”என ஒரு அறிக்கை விட்டிருந்தார். இதனைப் பிள்ளையார் கேட்டால் அவரே அழுவார். பெயர் போடும் அரசியல் செய்ய நான் வரவில்லை. நிரந்தரத் தீர்வுகளைப் பெறவே நான் அரசியலுக்கு வந்தேன்.
பதவி ஆசைக்கு வரும் புத்தியும் எனக்குக் கிடையாது 10 ஆயிரம் வீடுகளையும் நீங்களா கொண்டு வந்தீர்கள். சரி வைத்துக்கொள்ளுங்கள். அதே மாதிரி மலையக மக்களுக்கு பிரஜாவுரிமையை நீங்களா பெற்றுக்கொடுத்தீர்கள் சரி கொடுத்துக்கொள்ளுங்கள். நாளைக்கு ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கியதும் நான்தான் என்று கூறுவீர்கள். அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம்.
நான் அனைவரும் ஒன்றிணைந்து கட்சி பேதமின்றி வேலை செய்வோம் என்றுதான் கூறுகின்றேன். 57 சதவீதமான மலையக மக்கள் தற்போது வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கின்றார்கள். ஆனால், இங்குள்ள 10 மலையக எம்.பி.க்கள் உள்ளுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றோம்.வெளியே வந்த பின்னர் கை குலுக்குகின்றோம். என்ன நியாயம் இது?
இன்று (இன்று) நுவரெலியாவிலும் மலையகத்தமிழர் என்ற அடையாளத்தை வழங்கக் கோரி ஒரு போராட்டம் நடந்தது. எமது அடையாளம் இந்திய வம்சாவளித் தமிழர் என்று இருப்பது எமக்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகளை அங்கீகரிக்கும் ஒரு அடையாளம் என்பது எனது நிலைப்பாடு.
ஆனால், மக்கள் சொல்வதையும் நான் கேட்க வேண்டும் என்பதும் எனது நிலைப்பாடு. எனவே, சிவில் அமைப்புக்கள் மலையகப் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தனி அடையாளக் கோரிக்கையை ஒற்றுமையாக ஜனாதிபதியிடம் முன்வைப்போம்.” – என்றார்.