முடிந்தால் வெளியில் வந்து பேசுங்கள்! – ஜீவனுக்கு மனோ பகிரங்க சவால்
“மலையக அமைச்சர் (ஜீவன் தொண்டமான்) கோபமாகப் பேசுகின்றார், பதற்றத்துடன் பேசுகின்றார். 5 வருடங்களாக வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க முடியாமல்போனதையிட்டுதான் அவர் பதற்றமடைய வேண்டும். 2019 ஆம் ஆண்டில் இருந்து அரசில் இருக்கும் இந்த நபர் பேசி, பேசியே காலத்தை ஓட்டுகின்றார்.”
– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய அவர்,
“கொழும்பில் ‘நாம் 200’ நிகழ்வை நடத்தினார்கள், எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருந்தும் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். நான் நாகரிகமும், பண்பாடும் கொண்ட குடும்பப் பின்னணியில் வளர்ந்தவன். எனது பெற்றோர் என்னை அப்படித்தான் வளர்த்துள்ளனர். ஆகவே, எனக்கு நாகரிகம், பண்பாடு தெரியும்.
எமது கண்டி மாவட்ட எம்.பி. வேலுகுமார் இங்கே இருக்கின்றார். கண்டி, ஹந்தானையில் இவர் 22 ஏக்கர் நிலத்தை அபகரித்துவிட்டார் என்று மலையக அமைச்சர் பொய் கூறுகின்றார். இந்த அமைச்சர் இது பற்றி நாடாளுமன்றத்துக்கு வெளியே வந்து பேசுவாரானால் நாம் நீதிமன்றம் செல்லத் தயாராக இருக்கின்றோம்.
நானும் கண்டிக்கு வருகின்றேன். வேலுகுமார் பிடித்து வைத்துள்ளார் எனக் கூறப்படும் நிலத்தை மக்களுக்குப் பிரித்து வழங்குவோம். எனவே, தயவு செய்து பொய்கூற வேண்டாம்.” – என்றார்.