13 இற்கு முடிவு கட்டாமல் ஜனாதிபதி முறைமையில் கைவைக்கவே கூடாதாம்! – சு.க. கூறுகின்றது.
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்காமல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றுவது பற்றி கருத்தாடல் இடம்பெறுவது நாட்டில் மீண்டும் பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும். ஜனாதிபதி முறைமை மாற்றம் பற்றி பேசுவதற்குத் தற்போதைய ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை இல்லை.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால மேலும் கூறியதாவது:-
“ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்யவேண்டுமெனில் அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம். நாட்டில் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடிய விடயம் இதுவாகும் என்பதால் எடுத்த எடுப்பிலேயே எதனையும் செய்துவிட முடியாது.
ஜனாதிபதி முறைமையால்தான் இந்த நாடு சமஷ்டு முறைமைக்குச் சென்று, பிரிவினைவாதம் தலைதூக்கியது. எனவே, அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நீக்காமல், ஜனாதிபதி முறைமையை நீக்க முடியாது.
ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு, அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கினால் ஆளுநர் நியமனம் மற்றும் முதலமைச்சருக்குள்ள அதிகாரம் எவை என்பன தொடர்பிலும் பிரச்சினை உள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் போன்ற தேசிய ரீதியிலான தேர்தலொன்றின்போது மக்கள் நீதிமன்றம் முன்சென்று, அவர்களிடம் யோசனையை முன்வைத்து, கலந்துரையாடியே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தற்போதைய ஜனாதிபதிக்கு இதனைச் செய்வதற்குரிய மக்கள் ஆணை இல்லை. அரசியல் இலாபம் பெறும் நோக்கிலேயே இது தொடர்பான கருத்தாடல் இடம்பெறுகின்றது.” – என்றார்.