திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.திருப்பூரில், 100 படுக்கை வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் 32 மருத்துவ பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்காக பிரதமர் மோடி கடந்த 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மொத்தம், 81 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகள் முடிவுற்ற நிலையில் இஎஸ்ஐ மருத்துவமனையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக பிற்பகல் 3 மணியளவில் திறந்து வைக்கிறார்.
திருமுருகன்பூண்டி ரிங்ரோட்டில் அமைந்துள்ள இந்த இஎஸ்ஐ மருத்துவமனை மூலம் திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியில் உள்ள சுமார் மூன்றரை லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனை மட்டுமின்றி ஆந்திரா, பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள 20 இஎஸ்ஐ மருத்துவமனைகளை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.