ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மற்றும் பிற உயர்மட்டப் பிரதிநிதிகள் அமர்வின் தொடக்கத்தில் சுருக்கமான தொடக்க உரைகளை வழங்கவுள்ளனர்.
அதேநேரம் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலோ அல்லது வேறு அமைச்சர்கள் தலைமையிலான குழுவினரோ இந்த முறை குறித்த கூட்டத்தொடரில் பங்கேற்கமாட்டார் என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான முன்னேற்றகரமான விடயங்கள் தொடர்பான சமர்ப்பணங்களை ஜெனிவாவில் உள்ள வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க முன்வைக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அவதானிப்பு அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதையடுத்து, ஜெனிவாவுக்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க அந்த வாய்மொழி அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான பதிலளிப்பை வழங்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆறாவது அமர்வு கென்ய தலைநகர் நைரோபியில் இன்று முதல் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கழிவுப் பிரச்சினை போன்ற நெருக்கடிகளுக்கான தீர்வுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.