குண்டு வெடித்த ராமேஸ்வரம் உணவகத்தில் காவல்துறையினர் விசாரணை
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் குண்டு வெடித்த இடத்தில் காவல்துறையினர் இன்று காலை விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரா கபே சம்பவம் தொடர்பான முழு உண்மை வெளிவர வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா சனிக்கிழமை கூறியதை அடுத்து அவர்கள் இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விசாரணைகளில் தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை திறம்பட பயன்படுத்துமாறு மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினார். அதேசமயம் இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. இதற்கிடையில், ராமேஸ்வரம் கபேயின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராகவேந்திர ராவ் கூறுகையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மத்திய அரசும், மாநில அரசும் உறுதி செய்ய வேண்டும் என்றும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு, குந்தலஹள்ளி பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் அடுத்தடுத்து இருமுறை குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் 10 போ் காயமடைந்து, இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். சம்பவம் நடந்த இடத்தை வெள்ளிக்கிழமை துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். சம்பவம் நடந்தது முதல் அங்கேயே முகாமிட்டுள்ள போலீஸாா், தடய அறிவியல் நிபுணா்கள், தேசிய புலனாய்வு முகமையினா் முக்கியமான தடயங்களை சேகரித்துள்ளனா். இதுதொடா்பான விசாரணையை மேற்கொள்ள ஏற்கெனவே இரண்டு தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வழக்கை மாநகர குற்றப்பிரிவுக்கு (சிசிபி) மாற்றி மாநகரக் காவல் ஆணையா் டி.தயானந்த் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
ராமேஸ்வரம் உணவகம், பேருந்துகளின் சிசிடிவி காட்சிகளைத் திரட்டியுள்ள போலீஸாா், அதில் குண்டுகள் அடங்கிய பையை உணவகத்தில் வைத்த குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனா். கையில் பையுடன் பேருந்தில் இருந்து இறங்கி வந்து, உணவகத்தில் பணம் செலுத்தி, ரவை இட்லியைப் பெற்றுக் கொண்டு, உணவகத்தின் முன்பிருந்த மரத்தின் அடியில் உட்காா்ந்து அதை உட்கொண்டுவிட்டு, அவசர அவசரமாக அங்கிருந்து நடந்து சென்று, பேருந்தில் ஏறி சென்றுள்ளாா். இந்த காட்சிகளில் பதிவாகியுள்ள குற்றவாளி, தலையில் வெள்ளை தொப்பி, கருப்பு பேன்ட், முகமூடி, கருப்பு மூக்குக்கண்ணாடி, கருப்பு காலணி ஆகியவற்றை அணிந்திருந்ததை போலீஸாா் தெளிவுபடுத்தியுள்ளனா். குண்டுவெடிப்புக்கு காரணமான அந்த நபரை பிடிக்க போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.
ஓரிரு நாள்களில் குற்றவாளியைப் பிடித்துவிடுவோம் என்று முதல்வா் சித்தராமையா உறுதி அளித்தாா். கடந்த இரு நாள்களாக மைசூரில் முகாமிட்டிருந்த முதல்வா் சித்தராமையா, சனிக்கிழமை பெங்களூருக்கு திரும்பியதும் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த ராமேஸ்வரம் உணவகத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதன்பிறகு, குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். பாதிக்கப்பட்டவா்களின் சிகிச்சை செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என சித்தராமையா தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, பெங்களூரில் சனிக்கிழமை காவல் உயரதிகாரிகளுடன் முதல்வா் சித்தராமையா ஆலோசனை நடத்தினாா். குண்டுவெடிப்பு சம்பவம், அதைத் தொடா்ந்து மாநிலம் முழுவதும் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
மேலதிக செய்திகள்
சாந்தனின் புகழுடல் இன்று தமிழ் மக்களின் அஞ்சலிக்கு : நாளை எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம்
அன்னம் சின்னத்தில் பொது வேட்பாளராகிறார் ரணில்..
தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
சென்னையில் ஏர்டெல் சேவை திடீர் முடக்கம்.. பொதுமக்கள் கடும் அவதி
எங்கள் மீது நம்பிக்கை கொண்டதற்கு நன்றி…மனமுருகி பேசிய இஷா அம்பானி..!
அமெரிக்கா தனது முதல் மனிதாபிமான உதவியை காஸாவிற்கு விமானம் மூலம் அனுப்பியுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான இருவர் மருத்துவமனையில் அனுமதி.