கெய்ரோவைச் சென்றடைந்துள்ள ஹமாஸ் போர் நிறுத்தக் குழு.
கெய்ரோ: இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தோரைக் கொண்ட குழு, எகிப்து தலைநகர் கெய்ரோவைச் சென்றடைந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
காஸாவில் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் கலில் அல்-ஹயாவின் தலைமையில் அக்குழு கெய்ரோ சென்றுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
முன்னதாக காஸாவில் போரை நிறுத்த இஸ்ரேல் கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டதாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் மார்ச் 2ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
அமெரிக்க விமானங்கள் மனிதநேய உதவிப் பொருள்களை விமானம் மூலம் காஸா பகுதியில் வழங்கத் தொடங்கிய பிறகு அவர் அவ்வாறு கூறியனார். மார்ச் 2ஆம் தேதி, 38,000 உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விமானத்திலிருந்து வீசப்பட்டதாகக் கூறப்பட்டது.
அந்த உணவுப் பொட்டலங்களில் பன்றி இறைச்சி கலந்த உணவுவகைகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
காஸாவில் சண்டை நிறுத்தம் தொடர்பான பேச்சுகளுக்காக ஞாயிற்றுக்கிழமை கெய்ரோவில் சமரசப் பேச்சாளர்கள் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாலஸ்தீனத்தில் அல்லலுறும் பொதுமக்களுக்கு விமானம் மூலம் நிவாரணப் பொருள்களை வழங்க வெளிநாட்டு அரசாங்கங்கள் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, காஸாவில் நீடித்த சண்டை நிறுத்தத்திற்கான வழிவகைகள் குறித்து சமரசப் பேச்சாளர்கள் கலந்துரையாடுவர்.
இஸ்ரேலிய, ஹமாஸ் தரப்பினரும் ஞாயிற்றுக்கிழமை கெய்ரோ சென்றடைவர் என்று எகிப்தியப் பாதுகாப்புப் பிரிவினர் கூறினர்.
இருப்பினும், பிணைபிடிக்கப்பட்டோரில் உயிருடன் இருப்பவர்கள் குறித்த முழுமையான பட்டியல் வெளியாகும் வரை சமரசப் பேச்சிற்குப் பேராளர்களை அனுப்பப் போவதில்லை என்று இஸ்ரேல் கூறுவதாகச் சொல்லப்பட்டது.
முன்னதாக, சென்ற வாரம் தோஹாவில் கத்தாரும் எகிப்தும் சமரசப் பேச்சுகளை வழிநடத்திய பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கிட்டத்தட்ட உடன்பாடு எட்டப்படும் நிலையை நெருங்கிவிட்டதாகக் கோடிகாட்டியிருந்தார்.
அதனால், கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு மீண்டும் சண்டை நிறுத்தம் தொடர்பான நம்பிக்கை எழுந்தது.
ஆறு வாரச் சண்டை நிறுத்தம் தொடர்பில் இஸ்ரேல் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் இனி பிணைபிடிக்கப்பட்டோரை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொள்வதைப் பொறுத்தே இதன் தொடர்பில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் சனிக்கிழமை அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
மார்ச் 10ஆம் தேதி ரமலான் நோன்பு மாதம் தொடங்கும்போது சண்டை நிறுத்தம் நடப்புக்கு வரும் என்று திரு பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காஸா குடியிருப்பாளர்களில் கால்வாசியினர் கிட்டத்தட்ட பஞ்சத்தின் பிடியிலிருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறுகிறது.
கடந்த வியாழக்கிழமை நிவாரணப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள கூடிய பாலஸ்தீனர்கள் 100க்கு மேற்பட்டோரை இஸ்ரேலிய ராணுவம் கொன்றதாக ஹமாஸ் அதிகாரிகள் கூறியதையடுத்து, ஜோர்தானியப் படையினருடன் இணைந்து விமானம் மூலம் நிவாரணப் பொருள்களை வழங்குவது குறித்து அமெரிக்கா அறிவித்தது.
ஜோர்தானும் பிரான்சும் ஏற்கெனவே விமானம் மூலம் காஸாவில் நிவாரணப் பொருள்களை வழங்கிவருகின்றன.
தீவிரத் தாக்குதல்
இதனிடையே, தெற்கு காஸா நகரமான கான் யூனிஸ் நகர்மீது தாக்குதலைத் தீவிரப்படுத்தியதாக ஞாயிற்றுக்கிழமையன்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இஸ்ரேல் விமானப் படையும் பீரங்கிப் படையும் ஆறு நிமிடங்களுக்குள் கிட்டத்தட்ட 50 இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கியதாகக் கூறப்பட்டது.
அதன்மூலம், பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்புகளையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து செயல்பட்ட பயங்கரவாதிகளையும் தனது படைகள் அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறியது.