கோட்டாவின் புத்தகம் சூடுபிடிக்கும் முன்னரே, ரணிலின் கார்ட்டூன் புத்தகம் இன்று வெளியிடப்படுகிறது
கார்ட்டூனிஸ்ட்களின் கண்ணில் ரணில் விக்கிரமசிங்க எப்படி தெரிந்தார் என்பதை காட்டும் “PRESS VS PREZ” எனும் நூல் இன்று (07) பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு நெலும் பொக்குண அரங்கில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக 2021 ஜூன் முதல் 2023 மே வரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொடுத்த தலைமைத்துவம் குறித்து பத்திரிகை கார்ட்டூனிஸ்டுகள் கண்ட பார்வைகளை கொண்ட தொகுப்பு புத்தகம் இது என, நூலினை உருவாக்கிய வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையும், வரிசைகளின் யுகத்தையும், நம்பிக்கையிழந்த நாட்டையும் , தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு எவ்வாறு மீட்டெடுத்தார் என்பதை ஊடகவியலாளர்கள் மற்றும் கார்ட்டூனிஸ்டுகள் எவ்வாறு பார்த்தார்கள் என்பதையும் இந்நூலில் பதிவு செய்துள்ளதாக வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.
நாட்டை மீட்கும் திட்டத்திற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகள் கார்ட்டூனாக உருவாக்கிய விதமும் இதில் அடங்கியுள்ளது.
மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நிரஞ்சன் குணவர்தனவினால் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், சிங்கள உருவாக்கம் , மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பொறியியலாளரும் , ஊடகவியலாளருமான சீ.ஜே. அமரதுங்கவினால் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமா விடயமும் கார்ட்டூன்கள் மூலம் இந்த படைப்பில் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதிய “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி” என்ற புத்தகமும் இன்று (7) வெளியிடப்படவுள்ளது.