மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏ, பி வலயங்களில் துரித அபிவிருத்தி! – ஜனாதிபதி உறுதி.
நாட்டை நவீன விவசாயப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் பயணத்தின் போது, மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏ, பி வலயங்களை விரைவாக அபிவிருத்தி செய்து அதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
இந்த நாட்டின் நீர்ப்பாசன வரலாற்றில் தனித்துவமான மாற்றத்தை ஏற்படுத்திய, மகாவலி திட்டதை காமினி திஸாநாயக்க செயற்படுத்தியிருக்காவிடின் இன்று நாடு அரிசியில் தன்னிறைவு அடைந்திருக்காது எனவும், நாட்டுக்கு அவசியமான மின்சாரத்தைப் பெற முடியாமல் போயிருக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி திஸாநாயக்கவின் 82 ஆவது ஜனன தின நிகழ்வில் நேற்று (20) கலந்துகொண்டிருந்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள காமினி திஸாநாயக்கவின் சிலைக்கு முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.
காமினி திஸாநாயக்கவின் கடந்த கால நினைவுகளை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அன்னாரின் அர்ப்பணிப்பு அனைவருக்கும் முன்னுதாரணமாகும் என்றும் கூறினார்.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காமினி திஸாநாயக்கவின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் காமினி திஸாநாயக்க மன்றத்தின் உப தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க வரவேற்புரை ஆற்றினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, காமினி திஸாநாயக்கவின் பாத்திரம் ஓர் அரசியல் முன்னுதாரணம் என்று குறிப்பிட்டார்.
மக்களுக்கு சேவை செய்வதன் மூலம்தான் அவர் பிரபலமடைந்தார் எனச் சுட்டிக்காட்டிய கரு ஜயசூரிய, அவரின் சரியான முகாமைத்துவம் இலங்கையை துரிதமாக அபிவிருத்தி செய்ய உதவியது என்றும் குறிப்பிட்டார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநரும் காமினி திஸாநாயக்க மன்றத்தின் தலைவருமான நவின் திஸாநாயக்க உரையாற்றுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் என்ற ரீதியில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதார முறை நாட்டுக்கு ஏற்றது என தனது தந்தை எப்போதும் கூறி வந்தார் என்று தெரிவித்தார்.
எதிர்காலத்திலும் நடுநிலையான வலதுசாரி இயக்கம் உருவாகும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவ்வாறானதொரு தலைவர் மக்களால் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கின்றேன் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில். அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, ராஜித சேனாரத்ன, வடிவேல் சுரேஷ், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சம்பிகா பிரேமதாஸ, ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய உட்பட பல அரசியல் பிரதிநிதிகள் மற்றும் காமினி திஸாநாயக்கவின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.