நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் அடையாள உண்ணாவிரதத்துக்குத் தடை! – பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு

தமிழர் தாயகத்தில் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான நாளை சனிக்கிழமை (26) யாழ். வடமராட்சி தொண்டைமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தடையுத்தரவு விதித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகளினால் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் தடையுத்தரவு விண்ணப்பம் இன்று முற்பகல் தாக்கல் செய்யப்பட்டது

இவ்வாறு பொலிஸாரால் விண்ணப்பிக்கப்பட்ட வழக்கிலேயே பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றால் இந்தத் தடை உத்தரவு வழங்கட்டுள்ளது.

ஏற்கனவே தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு வடக்கு, கிழக்கில் நீதிமன்றங்களினால் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி நாளை வடமராட்சி செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டமும், எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் போராட்டமும் நடைபெறும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்றுக் கூட்டாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.