சிங்கப்பூர்க் கப்பல் மோதி பாலம் ஆற்றில் விழுந்தது : மீட்பு நடவடிக்கை பல நாள்களுக்கு நீடிக்கலாம்.
பால்டிமோர், மேரிலேண்ட்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் ‘ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜ்’ என்று அழைக்கப்படும் பாலத்தின் மீது கப்பல் மோதியதை அடுத்து, அப்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றில் விழுந்ததாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்தது.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை இரவு 1.50 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாக பால்டிமோர் நகரத் தீயணைப்புத் துறைத் தலைவர் வாலஸ் தெரிவித்தார்.
இதனால், கிட்டத்தட்ட 20 பேரும் பல வாகனங்களும் ஆற்றில் விழுந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
இதுவரை இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் திரு வாலஸ் சொன்னார்.
இது ஒரு பெருவிபத்து என்றும் மீட்பு நடவடிக்கை பல நாள்களுக்கு நீடிக்கலாம் என்றும் தீயணைப்புத் துறைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
பாலம் எந்த அளவுக்குச் சேதமடைந்துள்ளது என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்தது. படாப்ஸ்கோ ஆற்றில் பாலம் விழுந்துவிட்டதாக ஃபாக்ஸ் பால்டிமோர் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பாலத்தில் உள்ள இருவழிச் சாலைகளின் அனைத்து தடங்களும் மூடப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து திசைதிருப்பிவிடப்படுவதாகவும் மேரிலேண்ட் போக்குவரத்து ஆணையம் அதன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
இதனையடுத்து, மேரிலேண்ட் ஆளுநர் வெஸ் மோர் அம்மாநிலத்தில் அவசரநிலையைப் பிறப்பித்துள்ளார்.
நிலைமையைச் சீரமைக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகத் திரு மோர் கூறினார்.
சிங்கப்பூர்க் கப்பல் இதற்கிடையே, சிங்கப்பூர்க் கொடியுடன் கூடிய ‘டாலி’ என்ற அக்கப்பலின் உரிமையாளர்கள், பாலத்தின் ஒரு தூணில் அக்கப்பல் மோதிவிட்டது என்றும் இதனால் கப்பல் ஊழியர்கள் எவரும் காயமடையவில்லை என்றும் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளதாக ‘பிபிசி’ செய்தி வெளியிட்டுள்ளது.
பாலத்தின்மீது மோதியது சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கப்பல்தான் என்பதைச் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையமும் உறுதிப்படுத்தியது.
அந்தக் கொள்கலன் கப்பலின் மொத்த எடை 95,000 டன் என்றும் விபத்து நிகழ்ந்தபோது அதில் 22 பேர் இருந்தனர் என்றும் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரில்லா வேடத்தில் குரங்குக் கூட்டத்தை விரட்டியடிக்கும் ஊழியர்கள்
சிங்கப்பூர்க் கப்பல் மோதி பாலம் ஆற்றில் விழுந்தது : மீட்பு நடவடிக்கை பல நாள்களுக்கு நீடிக்கலாம்.
வடக்கில கடந்த வருடம் 52 பேர் படுகொலை!
எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் – மொட்டுக் கட்சி சூளுரை.