உபரில் ஆட்டோ புக் செய்தவருக்கு ரூ.7.66 கோடி கட்டணம்.. ஷாக்கான வாடிக்கையாளர்!
நொய்டாவை சேர்ந்த நபர் ஒருவர் உபர் ஆட்டோவில் சவாரி ஒன்று செய்ததை அடுத்து ஆடிப்போகும் விதமாக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அவர் உபரில் ஆட்டோவை புக் செய்தவுடன் வழக்கமாக ஆட்டோ சவாரிக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுமோ அந்த கட்டணமே அதில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சேர வேண்டிய இடத்தை அடைந்த பிறகு இவருக்கு கோடிக் கணக்கில் பில் வந்ததால் ஒரு நிமிடம் அசந்து போய் நின்றுவிட்டார்.
தீபக் தெங்கூரியா என்ற நொய்டாவை சேர்ந்த ஒருவர் உபரில் ஆட்டோ சவாரி ஒன்றை புக் செய்துள்ளார். அதற்கான கட்டணமாக அவருக்கு 62 ரூபாய் காட்டியுள்ளது. பொதுவாக இதுபோன்ற குறைந்த கட்டணங்கள் கொண்ட சவாரியை உபர் டிரைவர்கள் கேன்சல் செய்து விடுவது வழக்கம். ஆனால் இந்த ஓட்டுநர் அவ்வாறு செய்யாமல் தீபக்கை சவாரியாக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் சேர வேண்டிய இடத்தை அடைந்தவுடன் உபர் அப்ளிகேஷனில் சவாரிக்கான கட்டணமாக 7.66 கோடி ரூபாய் காட்டியதும் மிரண்டு போய் விட்டார் தீபக்.
தீபக்கின் நண்பர் ஒருவர் இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோவை சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம் ஆன X ல் பதிவு செய்த பிறகு இது பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த வீடியோவில் தீபக் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் தீபக்கிற்கு உபரில் ஏற்பட்ட இந்த கசப்பான அனுபவம் பற்றியும், அவருக்கு விதிக்கப்பட்ட மிகப்பெரிய பில் தொகையை பற்றியும், அது சம்பந்தப்பட்ட விபரங்களையும் இருவரும் சேர்ந்து பகிர்ந்து கொண்டனர்.
தீபக் உபர் ஆட்டோவை புக் செய்த பிறகு ஏற்பட்ட காத்திருப்பு நேரத்திற்காக அவருக்கு கூடுதலாக ₹5,99,09189 கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதில் நகைச்சுவை அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்தத் தொகையிலிருந்து இவருக்கு பிரமோஷனல் டிஸ்கவுன்ட் ஆக 75 ரூபாய் கழிக்கப்பட்டுள்ளது. கேமராவின் பின்புறத்தில் இருந்து GST கட்டணங்கள் பற்றிய கேள்விகளோடு ஒரு குரல் ஒன்று ஒலித்தது. அதற்கு பதில் அளிக்கும் வகையில், நல்ல வேலையாக அது போன்ற கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படவில்லை என்று தீபக் கூறினார். “சந்திராயனில் சவாரியை புக் செய்திருந்தால் கூட இவ்வளவு செலவு ஆகி இருக்காது போல.” என்று இருவரும் அந்த வீடியோவில் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த வைரல் வீடியோவிற்கு பதிலளிக்கும் விதமாக உபர் X பிளாட்ஃபார்மில் பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில், “உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு எங்களுக்கு தயவு செய்து கால அவகாசம் தாருங்கள். கூடிய விரைவில் உங்களுக்கான பதிலுடன் உங்களை அணுகுகிறோம்.” என்று உபர் நிறுவனம் எழுதியிருந்தது.
இது போன்ற சம்பவங்கள் புதிதல்ல, அடிக்கடி இது மாதிரியான அடாவடித்தனமான கட்டணங்கள் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சோஷியல் மீடியா தற்போது கைக்குள் அடங்கி விட்டதால் இது மாதிரியான சம்பவங்கள் இப்போது வெளிவர தொடங்கியுள்ளது. நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட வீடியோ வெளியாவதும், அதற்காக தொடர்புடைய நிறுவனங்கள் மன்னிப்பு கோருவதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. எனினும் உங்களுக்கும் இதுபோன்ற ஏதேனும் நிகழ்வுகள் ஏற்படும் பட்சத்தில் அதனை அலட்சியமாக எண்ணாமல் உடனடியாக அதனை பொது மக்கள் பார்வைக்கு கொண்டு வருவது நல்லது.
மேலதிக செய்திகள்
திருட்டு மாடுகளை கொண்டு சென்ற யாழ்.பொலிஸ் உத்தியோகத்தர் STFடம் சிக்கினார்!
போதைப்பொருள் கடத்தியவருக்கு மரண தண்டனை.
ஜனாதிபதி வேட்பாளராக வேலன் சுவாமியை முன்னிறுத்த வேண்டும் – சீ.வி. விக்னேஸ்வரன்