ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு குறித்து கருத்துத் தெரிவிக்க ‘மொட்டு’ எம்.பிக்களுக்கு வாய்ப்பூட்டு!
வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து மொட்டுக் கட்சி எம்.பிக்கள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டதையடுத்து, முறையான முடிவு எடுக்கும் வரை எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் தங்கள் ஆதரவு குறித்து எம்.பிக்கள் கருத்து தெரிவிக்கக் கட்சித் தலைமை தடை விதித்துள்ளது.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு விவகாரத்தில் மொட்டுக் கட்சி பிளவுபட்டுள்ளது. அரசில் பதவிகளை வகிப்பவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர். அவர்களில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க மற்றும் அலி சப்ரி ஆகியோர் அடங்குகின்றனர். மற்றொரு பிரிவினர் சொந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இதேவேளை, மொட்டுக் கட்சியின் விதிமுறைகளை மீறி, ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் கட்சி தீர்மானித்துள்ளது.