சர்வதேச ‘டி-20’ போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் விளாசினார் நேபாள அணி
சர்வதேச ‘டி-20’ போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் விளாசினார் நேபாள அணியின் திபேந்திரா சிங்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பிரிமியர் கோப்பை ‘டி-20’ கிரிக்கெட் தொடர் ஓமனில் நடக்கிறது. அல் அமெராத்தில் நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் நேபாளம், கத்தார் அணிகள் மோதின.
‘டாஸ்’ வென்று முதலில் விளையாடிய நேபாள அணிக்கு ஆசிப் ஷேக் (52), குஷால் மல்லா (35) கைகொடுத்தனர். கத்தார் வீரர் கம்ரான் கான் கடைசி ஓவரை வீசினார். பந்தை எதிர்கொண்ட திபேந்திர சிங் அய்ரீ, முதல் மூன்று பந்தையும் சிக்சருக்கு அனுப்பினார். அடுத்த பந்தில் சிக்சர் அடித்த இவர், அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய இவர் கடைசி இரு பந்திலும் சிக்சர் அடித்தார்.
இதையடுத்து தொடர்ந்து ஒரே ஓவரில் 6 பந்திலும் 6 சிக்சர் அடித்த முதல் நேபாள வீரர் ஆனார். சர்வதேச ‘டி-20’ல் இந்தியாவின் யுவராஜ் சிங் (2007, இங்கிலாந்து), வெஸ்ட் இண்டீசின் போலார்டுக்கு (2021, இலங்கை) அடுத்து மூன்றாவது வீரர் ஆனார். 20 ஓவரில் நேபாள அணி 210/7 ரன் குவித்தது. திபேந்திரா (64 ரன், 21 பந்து) அவுட்டாகாமல் இருந்தார்.
அடுத்து களமிறங்கிய கத்தார் அணி கேப்டன் முகமது தன்வீர் (63) மட்டும் அரைசதம் அடித்து உதவினார். மற்றவர்கள் ஏமாற்ற 20 ஓவரில் 178/9 ரன் மட்டும் எடுத்து, 32 ரன்னில் தோல்வியடைந்தது.