ஐக்கிய அரபு எமிரேட்சில் பெய்த கனமழை காரணமாக சென்னையில் இருந்து 5 விமானங்கள் ரத்து.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ) பெய்த கனமழை காரணமாக சென்னையில் இருந்து 5 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரசு எமிரேட்ஸ், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட நகரங்களில் கனமழையால் பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின. அப்பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக யு.ஏ.இ முழுவதும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
விமான நிலையங்களிலும் தண்ணீர் பெருமளவு தேங்கி இருப்பதால் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. யு.ஏ.இ மற்றும் குவைத் நாடுகளில் கனமழை கொட்டித்தீர்ப்பதால் துபாய், ஷார்ஜா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் என 28 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக இந்திய விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதில் சென்னையில் இருந்து 5 விமானங்கள், மறு மார்க்கத்தில் இருந்து சென்னை வரும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.