ரணில் எந்தப் பக்கத்தில் நின்றாலும் தமிழர்களின் வாக்குகள் அவருக்கே! – டிலானின் கருத்துக்கு வஜிர பதிலடி.
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க எந்தப் பக்கத்தில் நின்று களமிறங்கினாலும், எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அவருக்கே வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
“சஜித் பிரேமதாஸவையோ அல்லது அநுரகுமார திஸாநாயக்கவையோ நம்புவதற்குத் தமிழ் மக்கள் தயாரில்லை. எனவே, அவர்கள் இருவரையும் தமிழ் மக்கள் ஆதரிக்கமாட்டார்கள்” – என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷக்கள் பக்கம் நிற்கும் வரை அவரால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாது என்று சஜித் அணி பக்கம் தாவியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். அவரின் கருத்துக்குப் பதில் வழங்கும்போதே ஐ.தே.கவின் எம்.பி. வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு கூறினார்.
“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்கவே சஜித் பிரேமதாஸவுக்குத் தமிழ் மக்கள் ஆதரவு வழங்கினார்கள். எனினும், அவரால் வெற்றிபெறவில்லை. ஆனால், இம்முறை ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியிடுகின்றார். வீழ்ச்சியடைந்த எமது நாட்டை மீட்டெடுத்த தலைவர் என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் வாக்களிப்பார்கள்.” – என்று வஜிர எம்.பி. மேலும் தெரிவித்தார்.