பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. மொகாலியில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், குஜராத் அணிகள் மோதின. பஞ்சாப் ‘லெவன்’ அணியில் மாற்றமில்லை. குஜராத் ‘லெவன்’ அணியில் ஸ்பென்சர் ஜான்சனுக்கு பதிலாக அஸ்மதுல்லா ஓமர்ஜாய் தேர்வானார்.
பஞ்சாப் அணிக்கு கேப்டன் சாம் கர்ரான், பிரப்சிம்ரன் சிங் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. சந்தீப் வாரியர் வீசிய 2வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 21 ரன் விளாசினார் பிரப்சிம்ரன். முதல் விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்த போது மோகித் ‘வேகத்தில்’ பிரப்சிம்ரன் (35) வெளியேறினார். ரஷித் கான் பந்தில் சாம் கர்ரான் (20) அவுட்டானார். ரோசோவ் (9), லிவிங்ஸ்டன் (6) ஏமாற்றினர். சாய் கிஷோர் ‘சுழலில்’ ஜிதேஷ் சர்மா (13), அஷுதோஷ் சர்மா (3), சஷாங்க் சிங் (8) சிக்கினர். மோகித் வீசிய 18வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி விரட்டிய பிரார், சாய் கிஷோர் வீசிய 19வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இவர் 12 பந்தில் 29 ரன் எடுத்து சாய் கிஷோரிடம் சரணடைந்தார். ஹர்பிரீத் சிங் (14) ‘ரன்-அவுட்’ ஆனார்.
பஞ்சாப் அணி 20 ஓவரில் 142 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ரபாடா (1) அவுட்டாகாமல் இருந்தார். குஜராத் சார்பில் சாய் கிஷோர் 4 விக்கெட் சாய்த்தார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு சகா (13) சுமாரான துவக்கம் கொடுத்தார். ரபாடா பந்தில் வரிசையாக 2 பவுண்டரி விரட்டிய கேப்டன் சுப்மன் கில் (35) நம்பிக்கை தந்தார். டேவிட் மில்லர் (4) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய சாய் சுதர்சன் (31) ஓரளவு கைகொடுத்தார். அஸ்மதுல்லா ஓமர்ஜாய் (13) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய ராகுல் டிவாட்டியா, ரபாடா வீசிய 18 வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 20 ரன் விளாசினார். ஹர்ஷல் படேல் ‘வேகத்தில்’ ஷாருக்கான் (8), ரஷித் கான் (3) வெளியேறினர்.
அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டிவாட்டியா வெற்றியை உறுதி செய்தார். குஜராத் அணி 19.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்து வெற்றி பெற்றது. டிவாட்டியா (36) அவுட்டாகாமல் இருந்தார். பஞ்சாப் அணி சார்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட் கைப்பற்றினார்.