ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் தோல்வியடைந்தது ராஜஸ்தான் அணி.
ஐதராபாத் ராஜிவ் மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல்., போட்டியில் ஐதராபாத், ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங் தேர்வு செய்தார்.
ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா (12) ஜோடி திணறல் துவக்கம் கொடுத்தது. அன்மோல்பிரீத் சிங்கும் 5 ரன்னில் அவுட்டாக, ஐதராபாத் அணி முதல் 8 ஓவரில் 48/2 ரன் மட்டும் எடுத்தது. இதன் பின் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறியது. ஹெட், நிதிஷ் குமார் இணைந்து வேகமாக ரன் சேர்த்தனர்.
சகால் வீசிய 9 வது ஓவரின் கடைசி 3 பந்தில் 6, 6, 4 என விளாசினார் ஹெட். இவருக்கு கைகொடுத்த நிதிஷ், அஷ்வின், அவேஷ் கான் பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார். ஹெட், இத்தொடரில் 4வது அரைசதம் எட்டினார். சகால் வீசிய 13வது ஓவரில் நிதிஷ் ரன் மழை (6, 4, 6, 4) பொழிய 21 ரன் எடுக்கப்பட்டன. ஐதராபாத் அணி 14.1 ஓவரில் 131 ரன் குவித்தது.
அவேஷ் கான் ‘வேகத்தில்’ ஹெட் (58) போல்டாக, நிதிஷ் 30 வது பந்தில் அரைசதம் எட்டினார். அடுத்து அஷ்வின் ஓவரில் (16 வது) அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்தார். இவருடன் ஜோடி சேர்ந்த கிளாசன், சகால் வீசிய 16வது ஓவரின் முதல் இரு பந்தில் அடுத்தடுத்து சிக்சர் விளாசினார்.
தனது விளாசலை நிறுத்தாத நிதிஷ், அவேஷ் கான் பந்துகளை சிக்சர், பவுண்டரிக்கு அனுப்பி மிரட்டினார். சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரில் கிளாசன் தன் பங்கிற்கு, பவுண்டரி, சிக்சர் அடித்தார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 201 ரன் குவித்தது. நிதிஷ் (76), கிளாசன் (42) அவுட்டாகாமல் இருந்தனர்.பராக் ஆறுதல்
ராஜஸ்தான் அணிக்கு துவக்கத்தில் பட்லர், சஞ்சு சாம்சன் என இருவரையும், புவனேஷ்வர் குமார் ‘டக்’ அவுட்டாக்கினர். 3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் (67), ரியான் பராக் (77) ஜோடி 134 ரன் சேர்த்தது. ஹெட்மயர் (13), ஜுரல் (1) அவுட்டாக, போட்டி ஐதராபாத் பக்கம் திரும்பியது.
புவனேஷ்வர் வீசிய கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டன. முதல் 2 பந்தில் 3 ரன் எடுக்கப்பட்டன. 3, 4, 5வது பந்தில் பாவெல், 4, 2, 2 ரன் என எடுத்தார். கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில் பாவெல் (27) அவுட்டாக, ராஜஸ்தான் 20 ஓவரில் 200/7 ரன் எடுத்தது. 1 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி ‘திரில்’ வெற்றி பெற்றது.
நேற்று 201/3 ரன் எடுத்த ஐதராபாத் அணி, நடப்பு ஐ.பி.எல்., தொடரில் ஐந்தாவது முறையாக 200 அல்லது அதற்கும் மேல் ரன் எடுத்தது. இதற்கு முன் கோல்கட்டா (204/7), மும்பை (277/3), பெங்களூரு (287/3), டில்லிக்கு (266/7) எதிராக 200 ரன்னுக்கும் மேல் எடுத்தது.
ஐ.பி.எல்., (2024ல்) ‘பவர் பிளே’ ஓவரில் தனது குறைந்தபட்ச ஸ்கோரை, நேற்று பதிவு செய்தது ஐதராபாத் அணி (37/2 ரன்). இதற்கு முன் பஞ்சாப்பிற்கு எதிராக 40/3 ரன் எடுத்திருந்தது.