பாட்டு ஹிட் ஆக காரணம் வரிகளா? இசையா? : இளையராஜா பஞ்சாயத்தில் ஜேம்ஸ் வசந்தன்.
இசையமைப்பாளர் இளையராஜா சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பாடல்களை சில நிறுவனங்கள் காப்புரிமை பெறாமல் பயன்படுத்தப்படுவதாக வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு “நீதிபதி வரிகள் பாடகர் என அனைத்தும் சேர்ந்துதான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது பாடலுக்கு பாடல் ஆசிரியரும் உரிமை கூறினால் என்ன ஆகும்?” என்று கேள்வி எழுப்பினர்.
இது பற்றி படிக்காத பக்கங்கள் என்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, இசை பெரியதா? பாடல் பெரியதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் இளையராஜாவிற்காக அவருடைய தம்பி கங்கை அமரன் வைரமுத்துவை திட்டி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், “வைரமுத்து இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு காரணமே நாங்க போட்ட பிச்சை தான். இல்லை என்றால் அவர் ஒரு ஆளாகவே இருக்க மாட்டார்” என்று கடுமையாக வைரமுத்துவை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இந்த நிலையில் இந்தப் பிரச்சனை குறித்து இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஃபிலிமி பீட் தமிழுக்கு பிரத்தியேகமாக தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதில், பாடல் என்பது இசையும், மொழியும் தானே? அதை எப்படி பிரித்துப் பார்க்க முடியும். நம்ம தனிப்பட்ட ஆளுமைகளை பற்றி பேசல, விமர்சிக்கல. ஏன்னா அதனால ஒரு பயனும் கிடையாது.
ஆனால் கருப்பொருள் அதாவது பாடலுக்கு இசையா மொழியா என்று பார்த்தால் இசை இல்லாமல் பாடல் இல்லை. பாடல் இல்லாமல் இசை இல்லை. அப்படி பிரிக்க முடியாத இரண்டை வச்சுக்கிட்டு எதற்காக இப்படி பேசிக்கிட்டு இருக்காங்கன்னா அது தனிப்பட்ட மோதல். இரண்டு ஆளுமையின் உரசல்கள். அதில் நமக்கு பெரியதாக உடன்பாடு கிடையாது. ஏன்னா பாட்டை ரசிக்கிற பாமரனுக்கு கூட சில பாட்டை ரசித்தாலும் அவருக்கு என்ன படம் என்று தெரியாது.
எம்ஜிஆர் படம் என்று அவருடைய கொள்கை பாடல்களை ரசித்தவர்களும், சிவாஜியின் தத்துவ பாடல்களை ரசித்தவர்களும், அதற்குப் பிறகு கமல் ரஜினி போன்றவர்களின் காதல் பாடல்களை ரசித்தவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். அது போல இப்போதுள்ள இளம் தலைமுறையினர்கள் நட்சத்திர நடிகர்களுக்காக மட்டும் பாட்டை ரசிக்காமல் பாட்டு நன்றாக இருந்தாலே போதும் என்று ரசிக்கிறவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
உதாரணமாக 2008இல் என்னோட சுப்பிரமணியபுரம் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்த படம் வெளியாவதற்கு முன்பு கண்கள் இரண்டால் பாடல் வெளியானது. அந்த பாடல் எஃப்எமில் வந்ததும் அதை ரசிகர்கள் ரசிக்க தொடங்கி விட்டார்கள். ஆனால் அந்த படத்தில் யாருமே ரசிகர்களுக்கு தெரிந்தவர்கள் கிடையாது. அந்த படத்தில் இயக்குனர்கள், தயாரிப்பாளர், நடிகர்கள் என்று எல்லாருமே புது முகங்கள் தான்.
ஆனால் பாடல் ஹிட் ஆனது. கண்கள் இரண்டால் பாட்டு ஹிட் ஆக வரிகள் காரணமா? இசை காரணமா? சொல்லுங்க பார்ப்போம்… இப்படி பாடலை கொண்டாடுகிற ரசிகர்களுக்கு இசையா? மொழியா? என்று எப்படி பாகுபாடு இருக்கும் என்று அந்த பேட்டியில் ஜேம்ஸ் வசந்தன் பேசியிருக்கிறார்.