அதிகாலை வேளையில் பைக் விளையாட்டுக் காட்டிய இளையோர் சிக்கினர்!
நேற்று அதிகாலை பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதி மற்றும் டூப்ளிகேஷன் வீதி பகுதியில் மோட்டார் சைக்கிள்களை கவனக்குறைவாக ஓட்டிச் செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவொன்று அவர்களை சுற்றி வளைத்ததாக ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
சுற்றி வளைப்பின் போது 20 மோட்டார் சைக்கிள்களுடன் 22 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அதிகாலை வேளையில் காலி வீதி, டூப்ளிகேஷன் வீதி, ஹெவ்லொக் வீதிகளில் மோட்டார் சைக்கிள்களை அஜாக்கிரதையாக அதிவேகமாக ஓட்டிச் செல்வதுடன், சிலவேளைகளில் பின் சக்கரத்தை மாத்திரம் பயன்படுத்தி வீதியில் செல்லும் ஏனைய வாகனங்களுக்கும், பயணிக்கும் மக்களுக்கும் சேதம் விளைவிப்பதாகக் கூறப்படுகிறது. சாலை மற்றும் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் சிரமப்படுகின்றனர் எனவும் புகார் கிடைத்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சில மோட்டார் சைக்கிள்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், அவை மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் குற்றமாகும் எனவும், அதன்படி மோட்டார் வாகன ஆணையாளரின் அனுமதியுடன் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என அவதானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கூறினார்.
குற்றம் நிரூபிக்கப்படுமானால் , 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்றும், இறுதியாக வாகனத்தை பறிமுதல் செய்வது, குற்றவாளிகளை காவலில் வைப்பது மற்றும் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வது ஆகியவை நீதிமன்றத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.