பலாங்கொடையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.
கடந்த மூன்று மாதங்களில் இரத்தினபுரி – பலாங்கொடை பகுதியில் மாரடைப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திடீர் மரண பரிசோதனைகளின்போது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது என்று பலாங்கொடை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் 30 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்களிடையே பதிவான 70 சதவீதமான உயிரிழப்புகளுக்கு மாரடைப்பே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக இளம் மற்றும் நடுத்தர வயதுடையோர் மாரடைப்பினால் உயிரிழப்பது அதிகரித்துள்ளது என்று பலாங்கொடை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.
இந்தநிலையில், 30 வயதுக்கு மேற்பட்ட நபர் ஒருவருக்குத் திடீரென வயிறு மற்றும் மார்பு பகுதியில் எரிச்சல், தலைச் சுற்றல் போன்ற நிலைமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக வைத்தியர் ஒருவரைச் சந்தித்து குருதி மற்றும் ஈ.சி.ஜி. பரிசோதனைகளை முன்னெடுப்பது சிறந்தது என்றும் பலாங்கொடை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜயதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.