இந்த எதிர்ப்புக் கோசம் எந்த இலவசக் கல்வி பற்றியது ? – குசல் பெரேரா

கடந்த மே 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை, “இலவசக் கல்வியை” காப்பாற்ற போராட வருமாறு  “மருத்துவ பீட மாணவர் நடவடிக்கைக் குழு” என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

போலீசார் தடியடி நடத்தியதால் போராட்டம் கலைக்கப்பட்டது.

போராட்டங்களை ஒடுக்குவதே இந்த அரசாங்கத்தின் அன்றாட வாடிக்கையாக உள்ளது.

அதை எதிர்க்க அனைத்து ஜனநாயக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் முன்னின்று நடத்துவது அவசியமானாலும், நடப்பது அதுவல்ல. அடிக்கடி கேட்பதும், பார்ப்பதும் இலக்கற்ற கோரிக்கைகளுக்காக மக்கள் வீதியில் இறங்குவதை மட்டுமே.

இதேபோன்றுதான் இந்த மருத்துவ பீட மாணவர் நடவடிக்கைக் குழுவின் எதிர்ப்பும், அதே போன்றதொரு அடிப்படையைக் கொண்டதுதான்.

(1) கொத்தலாவல டிஃபென்ஸ் அகாடமி மூலம் மருத்துவப் பட்டங்கள் விற்பனை செய்வது

(2) மாநில மருத்துவக் கல்லூரிகளை நாசமாக்கி NSBM மூலம் மருத்துவப் பட்டக் கடைகளைக் கொண்டு வருதல் மற்றும்

(3) இலவசக் கல்வியைக் கட்டுப்படுத்தும் தேசியக் கல்விக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவதை எதிர்ப்பது என அநேக கோசங்கள்……..

இந்த கோசங்களை எடுத்துக் கொண்டால், முதல் மற்றும் இரண்டாவது கோரிக்கை இடையே எந்த அடிப்படை வேறுபாடும் இல்லை.

கொத்தலாவல பாதுகாப்பு அகாடமியைப் பொறுத்தவரை, அது அக்டோபர் 2007 இல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டதொன்றாகும்.

மருத்துவ பட்டப்படிப்பு 2009ல் ஆரம்பமானது.

இன்ஜினியரிங் பட்டப்படிப்பு 2011ல் ஆரம்பமானது.

வழக்கமான பணம் அறவிடும் தினசரி மாணவர்களுக்கான பட்டப் படிப்புகள் 2012 இல் ஆரம்பமானது.

கொத்தலாவல டிஃபென்ஸ் அகாடமி 11 வருடங்களாக இதுபோன்ற பணம் அறவிடும் பல பட்டப்படிப்புகளை நடத்தி வருகிறது.

சுமார் 40 ஆண்டுகளாக அரசுப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டம் பெறாத நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெளிநாட்டு மருத்துவ பீடங்களில் பணம் கொடுத்து மருத்துவப் பட்டம் பெற்று நாடு திரும்புகின்றனர். அதற்காக அவர்கள் செலவிடுவது ரூபாயை அல்ல ,நமது அந்நியச் செலாவணியான டொலரைத்தான் .

1965 / 16 ஆம் இலக்க வைத்திய சட்டத்தின் கீழ் வெளிநாட்டு டொலர் செலவில் பெறப்பட்ட வெளிநாட்டு மருத்துவ பட்டத்துடன் வரும் இவர்கள் அனைவரையும் இலங்கையில் வைத்தியர்களாக பதிவு செய்து, அரச வைத்திய சேவையில் நியமனம் பெற அவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இதுவரை எந்த ஆட்சேபனையும் அதற்கு எதிராக இல்லை. இந்த நாட்டில் மருத்துவப் பட்டங்களை ரூபாயில் பெறுவதை மட்டுமே இவர்கள் எதிர்க்கின்றனர்.

இரண்டாவது விடயம், அரசு மருத்துவ பீடங்களில் இருந்து NSBM மூலம் மருத்துவப் பட்டங்களை கொண்டு வருவது இலவசக் கல்வியை அழிப்பது என்பதாகும்.

முதலாவதாக, அரசுப் பல்கலைக் கழகங்களில் உள்ள மருத்துவப் பீடங்கள் எதிலுமே குறை இல்லை என ஏதுமில்லை என்பதாக இல்லை.

எங்களுடைய 12 மருத்துவ பீடங்களில் எதுவும் உலகில் அல்ல, ஆசியாவின் முதல் 300 இடங்களுக்குள் கூட இல்லை.

“EduRank” நிறுவனம் கடந்த பெப்ரவரி 29ஆம் திகதி வெளியிட்ட தரவரிசையின்படி கொழும்பு மருத்துவ பீடம் ஆசியாவில் 365வது இடத்தில் உள்ளது.

பேராதனை 399வது இடத்தில் உள்ளது.

களனி 611, ஸ்ரீ ஜயவர்தன புர 630, ருஹுணு 982, யாழ்ப்பாணம் 1220, மொரட்டுவை 1271, ரஜரட்டை 1361, வடமேற்கு 1935, ஊவா வெல்லஸ்ஸ 2064, சப்ரகமுவ 2107 மற்றும் தென்கிழக்கு மருத்துவ பீடம் 2354 ஆகிய இடங்களில் உள்ளன.

இவை இப்படியானதற்கு மருத்துவப் பட்டங்களை வழங்குவதாக சொல்லும் கடைகள் காரணமல்ல. ஆசிரிய மேலாண்மை மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு மருத்துவ பீடங்கள் தரமிழந்துள்ளன.

ஏனெனில் ஒவ்வொரு அரசாங்கமும் தனது சமூகப் பொறுப்புகளை கைவிடுகின்றன. எனவே பட்டக்கடைகளால் அரச மருத்துவ பீடங்கள் அழிகின்றன என கூறுவதற்கு முன்னர் 2 தசாப்தங்களுக்கு மேலாக வருடாந்த மருத்துவ பீட மதிப்பீடுகளை இலங்கை மருத்துவ சபையால் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோர வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளின் தரப் பதிவுகளின் அடிப்படையில் குறைந்தபட்சம் ஆசியாவின் முதல் 200 கல்லூரிகளுக்குள் சேர்க்க முடியுமா என கோருவது , கோட்டை ரயில்வே நிலையத்தின் முன் கோஷம் போடுவதை விட முக்கியமானதாகும்.

அது தொடர்பில் இதையும் கூற வேண்டும். வெளிநாட்டு மருத்துவ பீடங்கள் வழங்கும் மருத்துவப் பட்டங்களை அங்கீகரிப்பதற்கான அளவுகோல்களை உள்ளடக்கிய தேசியக் கொள்கையைத் தயாரிப்பதற்காக பிரதமரின் செயலர் தலைமையில் குழுவொன்றை நியமிக்க கடந்த ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்தது.

அங்குள்ள பரிந்துரையின் அடிப்படையில், முதல் ஆயிரம் மருத்துவ பீடங்களில் இருந்து பெறப்படும் பட்டங்களை உலக தர மதிப்பீட்டின்படி அங்கீகரிக்கும் வகையில் மருத்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் கையெழுத்திட்ட அமைச்சரவை பத்திரம் கடந்த ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இந்த முடிவு, எங்களின் எந்த மருத்துவ பீடத்திலும் இல்லாத, மேம்பட்ட மருத்துவ பீடங்களில் இருந்து அதிக படித்த மருத்துவர்களை நியமிக்க அனுமதிக்கும். தற்போது, ​​எமது நாட்டில் முதலிடத்தைப் பெற்றுள்ள கொழும்பு மருத்துவ பீடம், உலகில் 1,182 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கராப்பிட்டிய எனப்படும் ருஹுனு மருத்துவ பீடம், உலகின் 2,575 வது மருத்துவ பீடமாகும். இலவசக் கல்விக்காகவே இப்படிப்பட்ட மருத்துவ பீடங்கள் காக்கப்பட வேண்டும் என்பதாக சொல்வுதே இந்நிலையில் உள்ள மருத்துவ பீடங்களைத்தான்.


இந்த எதிர்ப்பாளர்களின் மூன்றாவது கருத்து  ஏனைய இரண்டு கருத்துகளை விட மிக மோசமான ஒன்றாகும். கல்விச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை தனது சொந்த விருப்பத்தின் பேரில் வகுக்கும் சுதந்திரமான உரிமை அல்லது அதிகாரம் அரசாங்கத்திற்கு இருக்கக்கூடாது. கல்வி சீர்திருத்தம் ஒரு திறந்த சமூக செயல்பாட்டில் செய்யப்பட வேண்டும்.  இலவசக் கல்விக்கு வேலி போடும் தேசியக் கல்விக் கொள்கைகளைக் கொண்டு வருவதை எதிர்க்க, இலவசக் கல்வி இருந்தாக வேண்டும் என்பதாகும்.

சி. டபிள்யூ. டபிள்யூ. கண்ணங்கர

இந்த நாட்டில் இலவசக் கல்வியே இருந்ததில்லை.

1943 ஆம் ஆண்டின் அமர்வுத் தாள் எண். 24 ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட “கல்விக்கான சிறப்புக் குழுவின் அறிக்கை” (கன்னங்கரா அறிக்கை), இலவசக் கல்வி பற்றிய அதன் குறிப்புகளில் வெளிப்படையான முரண்பாட்டைக் கொண்டுள்ளது.

அதன் “முதன்மை முடிவுகள் மற்றும் பரிந்துரைகளின் சுருக்கம்”, அத்தியாயம் 20 இன் பிரிவு 372ல் , “மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையிலான கல்வி இலவசக் கல்வியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்” என்று கூறுகிறது.

அதைக் குறிப்பிட்ட பின்னர், பிரிவு 377ல் இப்படிக் கூறுகிறது, “அவர்கள் மேல்நிலை மற்றும் மூத்த பள்ளி உபகரணக் கட்டணங்களை வசூலிக்க,  அவர்களுக்கு விருப்புரிமை உள்ளது. மூத்த பள்ளிகளில் ஒரு குழந்தையிடமிருந்து மாதத்திற்கு அதிகபட்சமாக 2 ரூபா மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிகபட்சமாக 3 ரூபாவை அறவிடலாம். அது 1943ல் உள்ள விலையின்படியாகும் என்கிறது.

இந்த நாட்டில் இலவசக் கல்வி என ஒன்று இருந்ததில்லை.

தெருவில் இறங்கி கத்துபவர்கள் தங்கள் பள்ளி நாட்களில் தங்கள் பள்ளிகளிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எவ்வளவு தொகையாக இருந்தாலும், கிராமப் பள்ளிக்கூட வசதிக் கட்டணத்துடன் பள்ளி மேம்பாட்டுச் சங்கத்தின் ஆண்டு உறுப்பினர் கட்டணமாக சில ஆயிரங்கள் வசூலிக்கப்படுகின்றன.

கிராம சேவை அலுவலரின் பரிந்துரையின் பேரில் அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பெரும்பாலான தலைமையாசிரியர்கள் எப்படியாவது பள்ளி மேம்பாட்டு சங்க உறுப்பினர் கட்டணத்தை வசூலிக்க அற்புதமான முயற்சியை மேற்கொள்கின்றனர்.

அபிவிருத்தி சங்க நிதிகள் அரசாங்க தணிக்கைக்கு உட்பட்டது அல்ல. மேலும், பிரபல மற்றும் நகர்ப்புற பள்ளிகளில் முதலாம் ஆண்டு வரையிலான குழந்தைகளைச் சேர்ப்பதில் இருந்து விளையாட்டு, கட்டிடங்கள் சீரமைப்பு மற்றும் பல்வேறு வெளி நடவடிக்கைகளுக்கு என ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை வசூலிக்கின்றமை என்பது எல்லோரும் அறிந்த கதைதான். இப்படிப்பட்ட கல்வி எப்படி இலவச கல்வி என்பதற்கு யாராவது ஒரு புதிய விளக்கம் தர இயலுமா?

இந்த பொய்யான “இலவசக் கல்வி” ஒழிக்கப்பட்டு, ஒரு முக்கியமான மேம்பட்ட தேசியக் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும், ஏனெனில் இந்த இலவசக் கல்வியில் அனைவரும் சமமாகக் கருதப்படவில்லை.

இந்த இலவசக் கல்வியில் அனைவரும் சமமாகக் கருதப்படாததால், அரசியல் தேவைகளுக்கு ஏற்பப் பாதுகாப்புக் கோரும் இந்தப் போலி “இலவசக் கல்வி” ஒழிக்கப்பட்டு முக்கியமான மேம்பட்ட தேசியக் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும்.

ஏனெனில் கல்வியில் கடுமையான வேறுபாடுகள் உள்ளன. பள்ளி செல்லும் வயதில் உள்ள 96 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதால், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் கல்வி இலக்குகளை நாங்கள் அடைந்துவிட்டோம் என்று கூறினாலும், பெரும்பாலான பள்ளிகள் காலியான திறந்தவெளி அரங்குகளாகவே உள்ளன.

பள்ளி அமைப்பில் வசதிகள் மற்றும் வளங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. நகரங்களில் உள்ள முக்கியப் பள்ளிகளில் இருக்கும் வசதிகள் எதுவும் கிராமப் பள்ளிகளில் இல்லை.

சில கிராமப் பள்ளிகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் தினமும் ஏழெட்டு கிலோமீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆயிரக்கணக்கான பள்ளிகளில் குடிநீர் இல்லை. கழிப்பறைகள் இல்லை. பல மாகாணங்களில், பொதுத் தராதரத்தில் சித்தியடைந்த பிள்ளைகள், அந்த மாகாணத்தில் உள்ள உயர்தர வகுப்புகள் நடைபெறும் பாடசாலையில் கற்பிக்கப்படும் உயர்தரத்திற்கான பாடத்தை தெரிவு செய்ய வேண்டியுள்ளது.

கொழும்பு பிள்ளைகளுக்கு இருக்கும் தெரிவுகள் எதுவும் அவர்களிடம் இல்லை. குறிப்பிட்ட பாடங்களுக்கு போதிய வசதிகளும் ஆசிரியர்களும் அங்கு இல்லை.

பள்ளி அமைப்பில் வசதிகள் மற்றும் வளங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இலவசக் கல்வியைக் காப்பாற்றவே இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகிறதே தவிர, தேக்கமடைந்திருக்கும் மருத்துவ பீடங்களை மேம்படுத்துவதற்காக அல்ல. ரூபாயில் செலவு செய்து இந்த நாட்டில் மருத்துவப் பட்டம் பெறுவதற்கு எதிராகவேயாகும்.

இலவசக் கல்வியைக் காப்பாற்ற என நடத்தப்படும் இந்தப் போராட்டங்கள் , மோசமடைந்திருக்கும் மருத்துவ பீடங்களை மேம்படுத்துவதற்காக அல்ல.

ரூபாயில் செலவு செய்து இந்த நாட்டில் மருத்துவப் பட்டம் பெறுவதற்கு எதிராகவாகும்.

இலவசக் கல்வியைக் காப்பாற்றுவதற்காக என போராட்டங்கள் செய்வது, இந்த நலிந்து வரும் ஆசிரியர் சேவையைக் கொண்டு வசதிகள் இல்லாத பள்ளி அமைப்பை மேம்படுத்துவதற்காக அல்ல. பொதுப் பல்கலைக்கழகங்களில் பயனற்ற டிப்ளோமாக்களை வழங்குவதற்குப் பதிலாக, மேம்பட்ட உலகளாவிய அறிவை இணைக்கக்கூடிய இலவச பல்கலைக்கழக கலாச்சாரத்தில் பட்டங்களைப் பெறும் நோக்கோடும் அல்ல.

சுருக்கமாகச் சொன்னால், இன்னும் மேம்பட்ட மற்றும் நவீன தேசிய கல்விக்கு சீர்திருத்தங்களைக் கோரியல்ல. அத்தகைய முன்னோக்கிச் சிந்திக்கும் நவீனப் பார்வை இவர்களிடம் இல்லை.

“தோல் நாற்றம் வீசினாலும் துரியன் பழத்தை உரித்து சாப்பிடமாட்டோம்” என்பது போன்ற கதைதான் இவர்களின் இலவசக் கல்வியை காக்கும் கதை.

குசல் பெரேரா
மூத்த அரசியல் விமர்சகர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்
kusal.perera@gmail.com

தமிழில் : ஜீவன்

 

 

Leave A Reply

Your email address will not be published.