சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டு கியூஆர் குறியீட்டுக் கட்டண முறையைத் தொடங்க ஜப்பான் இலக்கு.
சிங்கப்பூர் மற்றும் ஏழு ஆசிய நாடுகளிலிருந்து ஜப்பான் செல்லும் சுற்றுப்பயணிகள் விரைவில் ஒரு புதிய கூட்டுக் கட்டணத் திட்டத்தின்கீழ் தங்கள் உள்ளூர் கியூஆர் குறியீட்டுப் பணப்பைகளைப் பயன்படுத்தி தாங்கள் பொருள், சேவைகளுக்குப் பணம் செலுத்துவது எளிதாகும்.
அதேபோல, ஜப்பானியப் பயணிகளும் கியூஅர் குறியீட்டுக் கட்டணங்களை ஏற்கும் ஒரு சிங்கப்பூர் உணவங்காடிக் கடையில் உணவுக்காகப் பணம் செலுத்த முடியும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி ஒசாகா உலக எக்ஸ்போ மாநாடு தொடங்குவதற்கு ஏதுவாக இத்திட்டத்தைத் தொடங்க ஜப்பான் நோக்கம் கொண்டுள்ளது.
ஜப்பானின் ஜேபிகியூஆர் கட்டண முறை, எட்டு நாடுகளின் ஒன்றுபட்ட தரநிலைகளுக்குப் பொருந்தக்கூடியதாக இருப்பதை ஜப்பான் உறுதிசெய்கிறது.
சிங்கப்பூர் (எஸ்ஜிகியூஆர்), மலேசியா (டுயிட்நவ் கியூஆர்), இந்தோனீசியா (கியூஆர்ஐஎஸ்), பிலிப்பீன்ஸ் (கியூஆர்பிஎச்), தாய்லாந்து (தாய் கியூஆர் பேமென்ட்), கம்போடியா (கேஎச்கியூஆர்), வியட்னாம் (வியட்கியூஆர்), இந்தியா (பாரத்கியூஆர்) ஆகியவை அந்த நாடுகள்.
ஆனால், ஜப்பான் அதன் ஜேபிகியூஆர் முறையின் பயன்பாட்டை அதிகரிப்பதில் சவாலை எதிர்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் 15,000 வர்த்தகங்களில் மட்டும் அது பயன்பாட்டில் உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை சிறிய வர்த்தகங்கள்.