கரந்தெனிய PHI கொலைச் சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது கைது!
இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார கொலை உட்பட பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று (06) இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டுக்காக பொதுச் சுகாதார பரிசோதகரை உளவு பார்த்தது தொடர்பான உண்மைகளை பொலிசார் அம்பலப்படுத்தியுள்ளதுடன், இக்கொலை தொடர்பான மேலதிக தகவல்களை அவரிடமிருந்து வெளிக்கொணர முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எல்பிட்டிய, கரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான பத்தினி தேவகே திவங்க மனோகர என்ற நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றி விட்டு வெளியேறியவர் ஆவார்.