நரகத்தில் விழுந்த இலங்கையை குறுகிய காலத்தில் மீட்டெடுத்தேன்! – நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில் பெருமிதம்…
என்னிடம் இருந்த திட்டத்தாலும் அனுபவத்தாலும் சர்வதேச தொடர்புகளாலும் நரகத்தில் விழுந்த இந்த நாட்டைக் குறுகிய காலத்தில் மீட்டெடுத்தேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஒற்றுமையுடனும் பொது உடன்பாட்டுடனும் முன்னோக்கிச் சென்றால், இலங்கையை உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக விரைவில் உயர்த்த முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் எதிர்கால சந்ததியினருக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டை விட்டு தனிப்பட்ட இலட்சியங்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவது மாபெரும் அழிவின் ஆரம்பமாக அமையும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையிலேயே இதனைத் தெரிவித்தார்.
இன்று நாம் எவ்வாறு செயற்படுகின்றோம் என்பதைப் பொருத்தே எமது எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அன்று தம்மை நாட்டுக்குத் துரோகம் செய்தவர்களாக முத்திரை குத்திக்கொள்ள போகின்றார்களா அல்லது நாட்டின் மீது அன்பு கொண்டவர்கள் என்ற அடையாளத்தை பெறப் போகின்றார்களா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமின்றி, மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சமூகம், அரச சார்பற்ற அமைப்புகள், வெவ்வேறான சிந்தனைகளை கொண்ட தலைவர்கள், சமூகத்தில் தாக்கம் செலுத்தக்கூடியவர்கள் உள்ளிட்ட சகலரும் பொது உடன்பாட்டுன் இணைந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய முழுமையான உரை வருமாறு:-
“நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பணியை நான் பொறுப்பேற்றப் பின்னர், பொருளாதாரத்தின் உண்மையான நிலை குறித்த அனைத்துத் தகவல்களையும் அவ்வப்போது இச்சபையில் கூறியுள்ளேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுத்த பொருளாதார திட்டங்களையும் எதிர்காலப் பொருளாதாரத் திட்டங்கள் குறித்த உண்மைகளையும் கூறினேன். பற்றி எரிந்துகொண்டிருந்த நாட்டையே நான் பொறுப்பேற்றேன். நாடு நரகமாக மாறியிருந்தது. பொருளாதாரம் முடங்கிக் கிடந்தது. பணவீக்கம் 70 சதவீதமாக உயர்ந்திருந்தது.
மொத்த தேசிய உற்பத்தியில் 10-12 சதவீதத்திற்கும் அதிகமாக வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை அதிகரித்திருந்தது. வட்டி வீதம் 30 சதவீதமாக உயர்ந்திருந்தது. டொலரின் பெறுமதி சுமார் 450 ரூபா வரையில் அதிகரித்திருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு பூஜ்ஜியமாகிப் போனது.
ஒரு வாரத்துக்குக் கூட உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய பணம் இருக்கவில்லை. நாட்டில் பெரும்பகுதியானோர் வீதிகளில் இறங்கினர். பல நாட்களாக மக்கள் வரிசையில் நின்றனர். பல எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் நாட்டையும் பொருளாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்பும் சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். அந்த நேரத்தில் நாட்டைக் காப்பாற்றும் சவாலை ஏற்க எவரும் முன்வரவில்லை. பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்தனர். ஆனால், நான் நிபந்தனையின்றி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டேன். நாடாளுமன்றத்தில் எனது கட்சிக்கு ஒரேயொரு ஆசனம் மட்டுமே இருந்தது.
அத்தகைய ஆபத்தான சூழலிலே இந்தப் பணிகளை தோளில் ஏற்றுக்கொண்டேன். மூன்று காரணங்களுக்காகவே சவாலை ஏற்றுக்கொண்டேன். என்னிடம் ஒரு திட்டம் இருந்தது. அனுபவம் இருந்தது. சர்வதேச தொடர்புகள் இருந்தன. அதனால், நரகத்தில் விழுந்த இந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கையும் என்னிடம் இருந்தது. அந்த நம்பிக்கையுடன் நாட்டைக் குறுகிய காலத்தில் மீட்டெடுத்தேன்.
அப்போதிருந்து, நாங்கள் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்களை முறையாக செயற்படுத்த ஆரம்பித்தோம். இதன் பலனாக, 2023 ஆம் ஆண்டின் மத்தியில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது.
இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி குறைந்தது மூன்று சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம். பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இதனை எதிர்வுகூறியுள்ளன. பணவீக்கம் தற்போது 1.5 சதவீதமாக குறைந்துள்ளது. பல ஆண்டுகளாக பற்றாக்குறையாக இருந்த முதன்மை கணக்கு கையிருப்பு, 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீத உபரியாக மாற்றப்பட்டது.
பல தசாப்தங்களுக்குப் பிறகு, 2023 ஆம் ஆண்டில் நடப்புக் கணக்கில் ஒரு உபரி நிலுவைத்தொகை ஏற்பட்டது. வட்டி விகிதம் 10-13 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ளது. வௌிநாட்டுப் பணியாளர்கள் அதிகளவில் பணம் அனுப்புகிறார்கள். 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் டொலரின் பெறுமதியை 300 ரூபாவை விடவும் குறைவாகக் கொண்டுவர முடிந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு 5 பில்லியன் டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.
சவாலான, கடினமான, சரியான பாதையை நாங்கள் பின்பற்றியதால் இந்த நிலையை எங்களால் அடைய முடிந்தது. இந்நாட்டில் சிலர் நாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் விமர்சித்தார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு முதல் நாட்டின் பொருளாதார ஒழுங்கமைப்புக்கான அனைத்துச் செயற்பாடுகளையும் விமர்சித்தனர். ஆனால், அந்த விமர்சனங்கள், அவதூறுகள், கட்டுக்கதைகள் என அனைத்துக்கும் மத்தியில் நாம் தொங்கு பாலத்தை கடக்க முயற்சித்தோம். அது மட்டுமே ஒரே வழியாகும் என்பதையும் நாம் உணர்ந்துகொண்டிருந்தோம்.
2023 செப்டெம்பர் முதல், படிப்படியாக முன்னேறினோம். பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளில் விலைச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அரசின் வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதமாக சரிவடைந்திருந்தது. அதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதமாக காணப்பட்ட அரசின் செலவினங்களை நிர்வகிக்க வருவாய் போதுமானதாக இருக்கவில்லை. அதனால் அரசின் வருவாயை அதிகரித்த வேண்டிய கட்டாயம் காணப்பட்டது.
இதற்கு முன்பிருந்த சில அரசுகள், தொழில் வழங்கவும் சம்பளத்தை வழங்கவும், எரிபொருள், மின்சாரம், குடிநீர் சேவைகளைக் குறைந்த செலவில் வழங்கவும், வரவு – செலவுத் திட்டப் பற்றாக்குறையை நிவர்த்திக்கவும் வெளி நாடுகளிடம் கடன் பெற்றிருந்தனர். இல்லாவிட்டால் பணத்தை அச்சிட்டன. பல வருடங்களாக இதேமுறையில் பழகியிருந்ததால், நாம் ஏற்படுத்திய மாற்றத்தை தாங்கிக்கொள்வது கடினமாக இருந்தது.
ஆனால், நாட்டின் முன்னேற்றத்துக்கான மாற்றத்தை ஏற்படுத்த யாராவது முன்வர வேண்டியது அவசியம்.
தொடர் சீர்திருத்தங்கள் மூலம் நாட்டில் நிதி ஒழுக்கத்தை உறுதி செய்தோம். பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அடுத்தபடியாக கடன் மறுசீரமைப்பைச் செய்ய வேண்டியிருந்தது.
2022 செப்டெம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் அதுவே காரணமாகும். 2022 டிசம்பரில் மொத்தக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 128 சதவீதமாக காணப்பட்டது. அது நல்ல நிலைமையாக தெரியவில்லை. அதனால், கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை செயற்படுத்தினோம். அதனை மூன்று கட்டங்களின் கீழ் செயற்படுத்தினோம்.
அதில் முதலாவதாக கடன் மறுசீரமைப்பு. அந்தப் பணி 2023 ஆம் ஆண்டில் நிறைவடைந்தன. இரண்டாவதாக, வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் உத்தியோகபூர்வமாக பெறப்பட்ட கடனை மறுசீரமைக்க வேண்டியிருந்தது. அந்த நாடுகளுடனான கலந்துரையாடலுக்குப் பின்பு, 2023 நவம்பருக்குள் இந்தக் கடன்களை மறுசீரமைப்பது குறித்து கொள்கை ரீதியான உடன்பாட்டை எட்ட முடிந்தது.
அதற்காக பாரிஸ் கிளப் மற்றும் அதில் இணையாத சீனா போன்ற நாடுகளும் இணக்கம் தெரிவித்தன. தற்போது கடன் வழங்கிய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து அந்த பணிகளை நிறைவுக்கு கொண்டுவர வேண்டியது அவசியம்.
இலங்கை அரசு தற்போது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் கலந்துரையாடுகின்றது. அதேபோல், சீன வங்கியுடனும் இந்தக் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மூன்றாவதாக வணிகக் கடன் மறுசீரமைபுச் செயற்பாடுகள் காணப்பட்டன. இலங்கை அரசின் சார்பில் பணிபுரியும் லாசார்ட் மற்றும் கிளிபோர்ட் சான்ஸ் ஆகிய ஆலோசனை நிறுவனங்கள் கடன் வழங்குநர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றன.
இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் பேச்சு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்த வருடத்தின் மத்தியில் இந்த கலந்துரையாடல்கள் அனைத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். 2032 ஆம் ஆண்டுக்குள் மொத்தக் கடனை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95 சதவீதமாகக் குறைப்பதே கடன் மறுசீரமைப்பின் இறுதி இலக்காகும். அரசின் மொத்த நிதித் தேவையை ஆண்டுதோறும் 13 சதவீதமாகவும், வெளிநாட்டுக் கடன் சேவையை வருடாந்தம் 4.5 சதவீதமாக பேணுவதும் அடுத்த இலக்காக உள்ளது.
கடன் நிலைத்தன்மையை அடைவதற்கான ஒரே வழி இதுதான். கடன் நிலைத்தன்மையை உறுதி செய்யாமல் நீண்ட கால அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது சாத்தியமில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட அரச சோதனை அறிக்கையின்படி ஊழலுக்கு எதிரான திட்டத்தைச் செயற்படுத்த ஆரம்பித்திருக்கின்றோம்.
கடந்த இரண்டு வருடங்களாக நாம் நடைமுறைப்படுத்திய பொருளாதார மறுமலர்ச்சி வேலைத்திட்டத்தின் பெறுபேறுகள் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்திருக்கின்றது. அஸ்வெசும உள்ளிட்ட ஏனைய நிவாரணத் திட்டங்களின் கீழ் நாட்டில் உள்ள வறிய மக்களுக்கும் பெருமளவிலான நிதியை நேரடியாகக் கொண்டு சேர்க்க முடிந்தது. சிறுநீரக நோயாளிகள், முதியோர், ஊனமுற்றோர் ஆகிய தரப்பினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 2024 ஏப்ரல் முதல் 50 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் சமூர்த்தியை விட மூன்று மடங்கு அதிகமான பணம் வறிய மக்களைச் சென்றடைகின்றது. இந்த நிவாரணத் திட்டங்களுக்காக 2024 ஆம் ஆண்டில் 205 பில்லியன் ரூபா செலவிடப்படும். இரண்டாம் உலகப் போரின் பின்னரே இலங்கையில் முதன்முதலில் நிவாரணத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் இத்தகைய தொகை நிவாரணம் வழங்குவதற்காக செலவிடப்படவில்லை.
2022 ஆண்டு சிறுபோகத்திலும், 2022/2023 பெரும் போகத்திலும் , 2023 சிறு போகத்திலும், 2023/2024 பெரும் போகத்திலும் வெற்றிகரமான அறுவடையைப் பெற்றுக்கொண்டோம். அவற்றில் ஒரு பகுதியை இலவசமாக மக்களுக்கு பகிர்ந்தளிக்க அரசு எதிர்பார்த்தது.
அதன்படி கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் வறிய மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது. இனி வரும் காலங்களிலும் வறிய மக்களின் மேம்பாட்டுக்கான அனைத்து முயற்சிகளையும் அரசு முன்னெடுக்கும். 2024 ஆம் ஆண்டில் 12 பில்லியன் ரூபாவை செலவிட எதிர்பார்க்கப்படுகின்றது.
2024 ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா வாழ்வாதாரக் கொடுப்பனவாக வழங்கப்பட்டது. தற்போது 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்பட்டது.
வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும்போது இது போதுமானதாக இல்லை. இருப்பினும் அரசால் இயன்ற அளவில் இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ரூபாயின் பெறுமதி அதிகரித்திருப்பதால், கடந்த சில மாதங்களில் இறக்குமதி பொருட்களின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. அதனால் எரிவாயு, கனிய எண்ணெய் , பால்மா போன்றவற்றின் விலைகளும் குறைந்தன. மேலும், வட்டி வீதம் குறைவதால் தொழில் துறையினருக்கும் நிவாரணம் கிடைக்கும்.
2024 ஆம் ஆண்டிலும் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான கோரிக்கைகள் வந்தாலும் அரசின் வருமானம் அதற்குத் தகுந்த வகையில் அதிகரிப்பைக் காட்டவில்லை. கடந்த காலங்களில் பொறுப்பற்ற முறையில் வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் எமது பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கையையும் அழித்தது. அனைத்துப் பிரிவு மக்களும் கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் கடினமான பாதையில் பயணிக்கின்றனர்.
2024 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொண்டு சம்பளத் திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும்.
இப்போது செயற்படுத்தப்படும் பொருளாதாரத் திட்டங்களை கைவிட்டால் மீண்டும் பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். 2022 செப்டெம்பர் முதல் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் மூலம் பல சாதகமான பலன்களை அடைந்துள்ளோம்.
பெரும்பாலும் வெளிநாட்டு பரிவர்த்தனைகளைச் சார்ந்து இருக்கும் சிறிய பொருளாதாரம் என்பதால், நாம் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் பசுமைப் பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப அம்சங்களை பொருளாதார செயற்பாடுகளில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
அவ்வாறின்றி, ஒரு பொருளாதாரத்தை நீண்ட காலத்திற்கு நிலைநிறுத்த முடியாது. பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பலன்களை சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் முறையாகப் பகிர்ந்தளிப்பதை மையமாகக் கொண்ட சமூக-சந்தை பொருளாதார அடித்தளத்தை நாம் நிறுவ வேண்டும்.
நமது பொருளாதார வலிமையை அதிகரிக்க, விரைவான பொருளாதார வளர்ச்சிப் பாதையில் நாம் பயணிக்க வேண்டும். உயர் பொருளாதார வளர்ச்சியால், நமது கடன் சுமை குறையும். அதுமட்டுமின்றி வாழ்க்கைச் செலவும் குறையும்.
தொடர்ந்தும் மக்கள் மீது சுமையேற்றும், நட்டத்தில் இயங்கும் அரச தொழில்முயற்சிகளை எமது பொருளாதாரத்தால் முன்னெடுக்க முடியவில்லை. இதற்கான மாற்றுத் திட்டமொன்றை அரசு முன்மொழிந்துள்ளது.
தனியார் துறையின் பங்களிப்பின் மூலம் அரச நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்த முடியுமென்றால், மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றி, நட்டத்தை ஏற்படுத்தும் அரச தொழில்முயற்சிகளை அப்படியே தொடரக்கூடாது.
நாட்டில் பெருமளவிலான காணிகள் முறையாகப் பயன்படுத்தப்படாமல் மக்களுக்குச் சுமையேற்றும் வகையில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த காலங்களில், அந்த காணிகளில் தனியார் துறையால் வெற்றிகரமான விவசாய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தத் திட்டங்ளின் மூலம் அன்றிருந்த அரசாங்கங்கள் அதிக வருமானம் பெற்றன. அந்தச் செயற்பாடுகளின் மூலம் நாட்டுக்கு அதிக அந்நியச் செலாவணியும் கிடைத்தது.
எனவே, வர்த்தக ரீதியில் செயற்படும் ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் உள்நாட்டு தனியார் துறையின் பங்களிப்புடன் வர்த்தக ஏற்றுமதி விவசாயப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
1930களின் பின்னர் சுமார் 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு அவர்களது காணி உரிமையை வழங்கும் ‘உறுமய’ வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டம் அவர்களுக்கு காணியின் முழு உரிமையையும் வழங்குகிறது. இத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கை முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாய வர்த்தகர்கள் உருவாவதைத் தடுக்க முடியாது.
மேலும், தற்போதுள்ள விவசாய நிலங்களில் இருந்து உச்ச அளவில் பயனைப் பெற்றுக்கொள்வது அவசியம். அதன்படி, விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் அடிப்படையில் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விவசாயிகளை வலுப்படுத்துவது இந்தத் திட்டத்தின் ஒரு நோக்கமாகும்.
தற்போது 26 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் மேலும் 75 பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தில் மிகவும் வலுவான துறையாக இருந்த பல்வேறு சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் செயலிழந்தன. அந்த வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. அவற்றை மீட்டெடுப்பதற்கான திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பாரிய அளவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு கடன் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பராட்டே சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட குறுகிய காலத்திற்குள் இத்துறைக்கு மேலும் ஒரு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. திறைசேரியில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான விசேட பிரிவும் நிறுவப்பட்டு செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றது.
சுற்றுலாத்துறை வேகமாக வளர்ந்து வரும் தொழிற்துறையாக மாறியுள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுடன் ஒப்பிடும்போது, 2024 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 75 வீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி காணப்படுகின்றது. இந்த வருடத்தில் இதுவரை சுமார் 8 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலாத்துறைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டத்தைச் செயற்டுத்துவதில் அரசும் தனியார் துறைகளும் ஈடுபட்டுள்ளன.
நமது வெளிநாட்டு முதலீட்டுத் துறையை வலுப்படுத்துவது நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சியின் இன்றியமையாத பகுதியாகும். நம் நாட்டிலிருந்து பெற்றுக்கொள்ளகக்கூடிய முதலீடுகள் குறைவாக இருப்பதால், வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்குள் வர முறையான சட்டங்களும் நவீன நிறுவன கட்டமைப்பும் அவசியம். அந்த நோக்கத்திற்காக, தற்போதுள்ள பல நிறுவனங்களை இணைத்து புதிய பொருளாதார ஆணைக்குழுவை நிறுவுவது எமது எதிர்பார்ப்பாகும்.
மேலும், முதலீட்டுக்கான பழைய சட்டங்களுக்குப் பதிலாக புதிய ஒருங்கிணைந்த சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு நவீனமயப்படுத்த வேண்டிய பல்வேறு துறைகள் உள்ளன. கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தொழில் பயிற்சிக் கல்வி, நகர அபிவிருத்தி, பாதுகாப்புத் துறை, தகவல் தொழில்நுட்பம், வெளிநாட்டு உறவுகள், விநியோகச் சங்கிலிகள், ஏற்றுமதித் தொழில்துறை, தொழிற் படை போன்றவை இவற்றில் அடங்கும். மின்சாரத் துறையின் முழுமையான வளர்ச்சியை இலக்காகக் கொண்டு மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அணுகுமுறை எடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படையில் எமது வெளிநாட்டு உறவுகள் வலையமைப்பை தொடர எதிர்பார்க்கின்றோம். வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்குள் சர்வதேச வர்த்தக நிறுவனம் ஒன்றை நிறுவுவது தொடர்பான ஆரம்பகட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான புதிய சட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 இற்கும் மேற்பட்ட புதிய சட்டங்கள் மற்றும் சட்டத்திருத்தங்கள் இந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், இது போன்ற பல சட்டமூலங்களை விரைவில் இந்த நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கின்றோம்.
பொருளாதார பரிவர்த்தனை சட்ட மூலம், அரச நிதி சட்டமூலம் மற்றும் அரச கடன் முகாமைத்துவ சட்டமூலம் ஆகியவை அவற்றில் முக்கியமானவை.
பொருளாதாரப் பரிவர்த்தனை சட்டமூலமானது இலங்கைப் பொருளாதார ஆணைக்குழு, முதலீட்டு உட்கட்டமைப்பு வசதிகள் கூட்டுத்தாபனம், சர்வதேச வர்த்தக நிறுவனம், தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழு, இலங்கை பொருளாதார மற்றும் வர்த்தக நிறுவனம் ஆகியவற்றை உள்ளடக்கியது. பொருளாதார பரிவர்த்தனை சட்டம், நீண்ட காலத்திற்கு அரசாங்கம் பின்பற்ற வேண்டிய பல நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது.
எதிர்காலத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், இந்தப் பொருளாதாரத்தை மீண்டும் அதலபாதாளத்திற்கு இழுத்துச் செல்லாமல் இருக்க இந்தச் சட்டத்தின் ஏற்பாடுகள் தொடரப்பட வேண்டும். எமது நாடு எதிர்நோக்கும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், நாட்டை மீண்டும் இவ்வாறான அவலத்தில் தள்ளாமல் இருப்பதற்கும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நீண்டகால மற்றும் தொடர்ச்சியான வேலைத்திட்டம் அவசியம் என்பதை நான் தொடர்ந்தும் கூறி வந்தேன். நாங்கள் இதுவரை மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சிகள் விமர்சன ரீதியிலான ஆதரவை அளித்துள்ளன.
மறுசீரமைப்பு செயல்முறையைத் தொடர எதிர்காலத்தில் அத்தகைய ஆதரவு தேவை. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கடந்த இரண்டு வருடங்களாக அரசு நடைமுறைப்படுத்திய பொருளாதார சீர்திருத்தத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவளித்துள்ளனர்.
எரிந்து கொண்டிருந்த பொருளாதாரத்தில் இருந்து நிலையான பொருளாதாரத்தை நோக்கிய இந்தப் பயணத்தில் அடைந்த முன்னேற்றத்தால், நாடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட முன்னேற்றமடைந்துள்ளது. இந்த முன்னேற்றத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில குழுக்கள் நாம் நரகத்தில் ஒரு இடைவேளையைக் கடந்து கொண்டிருக்கிறோம் என்று கேலி செய்கின்றனர்.
ஆம், நாங்கள் பொருளாதார நரகத்தில் இருந்தோம். இப்போது நாம் முறையான திட்டமிடல் மூலம் இந்த நரகத்திலிருந்து வெளியே வருகின்றோம். ஆனால், தொலைநோக்குப் பார்வை இல்லாமல் குறுகிய கால மற்றும் குறுகிய எதிர்பார்ப்புகளை இலக்காகக் கொண்டு தற்போதைய பயணப் பாதையை மாற்றினால், நாம் மீண்டும் நரகத்துக்குள் தள்ளப்படுவோம். அது நடந்தால், நாம் அனைவரும் நீண்ட காலம் நீடிக்கும் மிகவும் துயர்மிகு காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இதுவரை நாம் முன்னெடுத்த வேலைத்திட்டம் வெற்றியடைவதாக எதிர்தரப்பு அரசியல் குழுக்கள் நாளுக்கு நாள் உறுதிப்படுத்திக்கொண்டிருப்பது நல்ல விடயம். புத்தாண்டின் போது, கூட்டுறவு விற்பனை நிலையங்களில் மக்கள் அதிகமாக திரண்டிருக்கும் படங்களை வெளியிட்டு, கூட்டுறவு சங்கங்களின் வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட கருத்துக்களைப் பார்த்தோம்.
சில அரசியல் நோக்கங்களுக்காக அந்தப் படங்களும் கருத்துக்களும் பதிவிடப்பட்டன. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, மக்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்பதையே அது பிரதிபலிக்கின்றது. இதேவே உண்மையாகும். முன்பை விட சற்றேனும் வளமாக உள்ளோம் என்பதையே இது காட்டுகிறது.
இந்த நாட்டிற்கான சவாலான பணியை நான் பொறுப்பேற்றபோது, நான் ஒரு தொங்கு பாலத்தில் நடக்க வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டேன். அன்றைய காலக்கட்டத்தில் அதைப் பொருட்படுத்தாதவர்களும் இன்று அதை ஒப்புக்கொள்கின்றார்கள். தொங்கு பாலத்தைத் தவிர வேறு வழியில்லை என்பதையே இது காட்டுகின்றது. இதைத் தவிர வேறு வழியில்லை என்றும் இன்று கூறுகின்றார்கள்.
நமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேறு வழியில்லை என்பதை மீண்டும் கூறுகின்றேன். இந்த வழியைத் தவிர வேறு எந்த மாற்றுவழியும் இல்லை. இந்தத் திட்டத்தைத் தவிர வேறு எந்தத் திட்டமும் இல்லை. அதனால்தான், இந்தப் பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்தில் பொதுவான உடன்பாடு மற்றும் பொதுவான ஒருமித்த கருத்து தேவை என்று நான் எப்போதும் கூறுகின்றேன்.
அந்த ஒருமித்த கருத்தை இந்த சபையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மட்டுமன்றி, மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், தொழில் வல்லுநர்கள், வர்த்தக சமூகம், அரச சாரா நிறுவனங்கள், பல்வேறு கருத்துக்களைக் கொண்ட தலைவர்கள், சமூகத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்கள் என அனைவரும் இந்த பொதுவான ஒருமித்த இணக்கப்பாட்டில் இணைய வேண்டும்.
உடன்பாடு மற்றும் ஒருமித்த கருத்துடன் முன்னேறினால், உலகில் அபிவிருத்தி அடைந்த நாடாக விரைவில் முன்னேற முடியும்.
அப்படியில்லாமல், இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டை விட்டு, தமது நலன்களை முன்னிறுத்தி செயற்பட்டால் அந்தப் பயணம் பெரும் அழிவின் தொடக்கமாக அமையலாம். அந்த ஆபத்துக்களை உணர்ந்து நாட்டின் நலனுக்காக நீங்கள் அனைவரும் பொதுவான உடன்பாட்டையும் ஒருமித்த கருத்தையும் எட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டை மீட்டெடுக்க நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு எதோ ஒரு வகையில் பங்களிப்பதற்கான இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். அனைவரும் சேர்ந்து இந்த மலர்த்தட்டில் கைவைப்போம். இன்று நாம் எவ்வாறு செயல்படுகின்றோம் என்பதை வைத்தே எமது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகின்றது.
நாட்டுக்குத் துரோகம் செய்தவர்கள் என்று முத்திரை குத்திக்கொள்ளப் போகின்றோமா?அல்லது நாட்டை நேசித்த குழுவாக அடையாளப்படுத்தப்படுவோமா?அதுதான் இன்று நாம் எடுக்க வேண்டிய முடிவாகும்.” – என்றார்.