சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பதவியேற்றார் லாரன்ஸ் வோங்.

சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக திரு லாரன்ஸ் வோங், 51, புதன்கிழமை (மே 15) பொறுப்பேற்றுக்கொண்டார்.

இஸ்தானாவில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், அதிபர் தர்மன் சண்முகரத்னம், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் முன்னிலையில் திரு வோங் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார்.

அப்போது, பிரதமராக எல்லா நேரங்களிலும் உண்மையாகக் கடமையாற்றுவேன் என்றும் தன்னாலான அளவிற்குச் சிறந்த முறையிலும் அச்சமின்றியும் பாகுபாடின்றியும் விருப்புவெறுப்புகளுக்கு இடமின்றியும் கடமையாற்றுவேன் என்றும் அவர் பற்றுறுதி எடுத்துக்கொண்டார்.

அதன்பின் பிரதமராகத் தமது முதல் உரையை ஆற்றிய திரு வோங், எல்லாருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் சமுதாயத்தையும் எல்லாச் சிங்கப்பூரர்களுக்கும் முக்கியமாக விளங்கும் சிங்கப்பூரையும் உருவாக்கும் இலக்கு நோக்கிய தமது பயணத்தில் சிங்கப்பூரர்கள் அனைவரும் தம்முடன் இணையும்படி அறைகூவல் விடுத்தார்.

“நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொருவர்க்கும் பங்குண்டு. நமது எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொருவரும் முக்கியப் பங்காற்றலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் முழு மனத்தோடு சேவையாற்றுவேன், இப்போதுள்ள நிலையிலேயே மனநிறைவு அடைந்துவிட மாட்டேன், இன்றைய நாளைக் காட்டிலும் மறுநாளைச் சிறப்பானதாக ஆக்கும் வழிகளை எப்போதும் நாடுவேன்,” என்று பிரதமர் வோங் உறுதிமொழி அளித்தார்.

தொடர்ந்து சாதித்து, சந்தேகப்படுபவர்களைத் தவறென நிரூபித்து, சிங்கப்பூர் என்ற அதிசயத்தைக் கட்டிக்காப்பதே நாட்டின் பிரதமராகத் தமது குறிக்கோள் என்று அவர் சொன்னார்.

“அதன்மூலம் நாம் இன்னும் பல உயரங்களைத் தொட முடியும். அவ்வகையில் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் நம்பிக்கையின், ஒற்றுமையின் கலங்கரை விளக்கமாக நாம் திகழ முடியும்,” என்றும் அவர் கூறினார்.

இஸ்தானா திடலில் நடைபெற்ற பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கவாதிகள், தொழில்துறைத் தலைவர்கள், விளையாட்டாளர்கள், கலைஞர்கள், சமூகத் தொண்டூழியர்கள், முன்களப் பணியாளர்கள் என கிட்டத்தட்ட 900 பேர் கலந்துகொண்டனர்.

அதிபர் தர்மன் சண்முகரத்னம், திரு வோங்கிடம் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கான நியமன ஆணையை வழங்கினார்.

அவரைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் லீ சியன் லூங் மூத்த அமைச்சராகவும், திரு கான் கிம் யோங், திரு ஹெங் சுவீ கியட் துணைப் பிரதமர்களாகவும், திரு டியோ சீ ஹியன் மூத்த அமைச்சராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, 14 அமைச்சர்கள், 9 மூத்த துணை அமைச்சர்கள், 5 துணை அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

ஆங்கிலத்தில் உரையைத் தொடங்கிய திரு வோங், பின்னர் மலாயிலும் மாண்டரினிலும் பேசி, அதன்பின் மீண்டும் ஆங்கிலத்தில் தமது உரையைத் தொடர்ந்தார்.

சிங்கப்பூர் விடுதலை அடைந்தபின் பிறந்த ஒருவர், சிங்கப்பூர் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளது இதுவே முதன்முறை. திரு வோங்கின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களில் பெரும்பாலோர் 1965ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தவர்கள்.

“நல்ல தலைமைத்துவம், அரசியல் நிலைத்தன்மை, நீண்டகாலத் திட்டமிடலின் மிகுந்த முக்கியத்துவத்தை அறிந்துள்ளோம்,” என்று கூறிய பிரதமர் வோங், தங்களது தலைமைத்துவப் பாணி, முந்திய தலைமுறைத் தலைவர்களின் பாணியைவிட மாறுபட்டதாக இருக்கும் என்றார்.

“எங்கள் வழியில் நாங்கள் நடைபோடுவோம். எங்கள் எண்ணமும் தொடர்ந்து துணிவுமிக்கதாகவும் தொலைநோக்குடனும் இருக்கும்,” என்றார் அவர்.

“இன்னும் செய்ய வேண்டியது ஏராளம் உள்ளது. ஏராளமான பக்கங்களை எழுத வேண்டியுள்ளது. சிங்கப்பூரின் சிறந்த அத்தியாயங்கள் முன்னே உள்ளன,” என்று அவர் கூறினார்.

ஆயினும், “அடுத்த அத்தியாயங்களை எழுதும்போது, புதிதாக ஒரு புள்ளியிலிருந்து தொடங்கப்போவதில்லை. நாங்கள் பெருந்தலைவர்களின் தோள்கள்மீது நிற்கிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“திரு லீ குவான் யூவும் அவர்தம் குழுவினரும் விடுதலை மூலம் நம்மை வழிநடத்தி, ஆட்சி நிர்வாகத்தின் முக்கியத் தூண்களை நிறுவினர். திரு கோ சோக் டோங்கும் அவரின் குழுவினரும் நம்மை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்று, கனிவான, மென்மையான சமூகத்தை உருவாக்கினர்,” என்று திரு வோங் சொன்னார்.

கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராகச் செயல்பட்ட திரு லீ சியன் லூங்கிற்குத் தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“இன்று, திரு லீ சியன் லூங்கிற்கு நமது நன்றிக்கடனைப் பதிவுசெய்கிறேன். அவர் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக் காலம் பொது வாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டவர். அவரது தலைமைத்துவத்தின்கீழ் சிங்கப்பூர் பல மாற்றங்களைக் கண்டுள்ளது; பல நெருக்கடிகளை வெற்றிகரமாகக் கடந்து வந்துள்ளது,” என்று திரு வோங் மெச்சினார்.

முன்வரிசையில் அமர்ந்திருந்த திரு லீ, உணர்ச்சிப் பெருக்குடன் சற்றே குனிந்து, திரு வோங்கின் புகழ்மாலையையும் கூடியிருந்தோரின் கைத்தட்டலையும் ஏற்றுக்கொண்டார்.

திரு லீயும் அனுபவமிக்க அமைச்சர்களும் என் அமைச்சரவையில் பங்கேற்று சேவையாற்ற இருப்பதற்கும் பிரதமர் வோங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

30, 40 வயதுகளில் இருக்கும் சிங்கப்பூர் இளையர்களை அடையாளம் கண்டு, அவர்களைத் தங்கள் குழுவில் சேர்க்க முன்னுரிமை அளிக்கவுள்ளதாகத் திரு வோங் கூறினார்.

“இளம் சிங்கப்பூரர்கள், பொருள்ரீதியான வெற்றி மட்டுமின்றி, அர்த்தமுள்ள வாழ்க்கையையும் வாழ்க்கைத்தொழிலையும் வழங்கும் சிங்கப்பூரை உருவாக்க விரும்புகின்றனர். அதனை எட்டுவதற்கு ஆக்ககரமான, புதுமையான வழிமுறைகளைக் கண்டறிவோம்.

“நியாயமான, நேர்மையான, சமத்துவமிக்க சமுதாயத்தை வளர்த்தெடுப்போம். முதியவர்களையும் சிறப்புத் தேவை உடையவர்களையும் பார்த்துக்கொள்வோம்.

“வாழ்க்கை, வயது, திறமையில் தொடக்கப் புள்ளி எதுவாக இருந்தாலும், தாங்களே தங்களைக் கைதூக்கிவிட்டு, நிறைவான வாழ்க்கையை வாழ எல்லாச் சிங்கப்பூரர்களுக்கும் ஆதரவளிப்போம்,” என்று பிரதமர் வோங் உறுதியளித்தார்.

பரஸ்பர மரியாதையும் நம்பிக்கையும் கொண்ட சூழலைச் சிங்கப்பூர் கொண்டுள்ளது என்ற அவர், அந்தப் பண்புநெறிகளே தம்மையும் தம் குழுவையும் வழிநடத்துமெனக் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூர் பல இன, சமய, மொழி பேசும் மக்களைக் கொண்ட நாடு. இருப்பினும், ஒரே மக்களாக நமது பிணைப்புகளை வலுப்படுத்தியுள்ளோம்.

“இன, சமய, மொழி பேதமின்றி, நாம் ஒரே மக்களாக ஒற்றுமையுடன் திகழ்வதாலும் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கையாலுமே நம்மால் கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொண்டு மீள முடிந்தது,” என்றார் அவர்.

சிங்கப்பூரின் வெளியுறவு தொடர்பான தமது குறிக்கோள்கள் பற்றிக் குறிப்பிட்டபோது, சிங்கப்பூரின் நலன்களை முன்னிறுத்தி, அண்டை நாடுகளுடனும் தொலைவிலுள்ள நாடுகளுடனும் பங்காளித்துவத்தை வலுப்படுத்த இருப்பதாகக் கூறினார்.

போட்டியும் பூசலும் சூழ்ந்த உலகில், ஒரு சிறிய நாடாக சிங்கப்பூர் வலுவான எதிர்ப்போக்குகளிலிருந்து தப்பிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

“வல்லரசுகள் புதிய, இன்னும் வரையறுக்கப்படாத அனைத்துலக நிலையை உருக்கொடுக்கப் போட்டியிடுகின்றன. புவிசார் அரசியல் பதற்றங்கள், தன்னைப்பேணித்தனம் போன்றவற்றால் எல்லா இடங்களிலும் அம்மாற்றம் இடம்பெறலாம். அது பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்,” என்றார் அவர்.

“பன்முகத்துவம் உடையும்போது, ஒரு சிறிய நாடாக, திறந்த பொருளியலைக் கொண்டுள்ள நாடாக, நமது வாழ்வாதாரங்களும் பாதிக்கப்படலாம்.

“இப்புதிய நடைமுறைச் சூழல்களை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப நாம் மாறிக்கொள்ள வேண்டும்.

“அதிர்ஷ்டவசமாக, அனைத்துலக அளவில் சிங்கப்பூரின் மதிப்பு உயர்ந்த நிலையிலுள்ளது. சிங்கப்பூர் வியந்து பார்க்கப்படுகிறது.

மேலும், சிங்கப்பூர் அனைத்து நாடுகளுடனும் எல்லாருடனும் நட்பு பாராட்ட விரும்புகிறது என்றும், அதே நேரத்தில் நமது உரிமைகளையும் நலன்களையும் நிலைநிறுத்துவோம் என்றும், அமெரிக்கா, சீனா என்ற இரு வல்லரசுகளுடனும் தொடர்ந்து இணைந்து செயலாற்றுவோம் என்றும் திரு வோங் சொன்னார்.

Leave A Reply

Your email address will not be published.