சிங்கப்பூரில் இணைய சூதாட்ட பாதிப்பைத் தடுக்க புதிய நிலையம்.

மோசடி அல்லது பொய்ச்செய்தி என்ற சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்தியின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்ள ‘செக்மேட்’ என்ற புதிய சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இணையப் பாதுகாப்பில் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கான புதிய நிலையத்தால் (கேடோஸ்) உருவாக்கப்பட்ட பல சேவைகளில் இதுவும் ஒன்று. இது வெறுப்புரை, பொய்ச்செய்தி, உள்ளிட்ட இணையப் பாதிப்புகளை சிங்கப்பூர் சமாளிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டது.

அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பால் நடத்தப்படும் ‘கேடோஸ்’ நிலையம் தொடர்பு, தகவல் அமைச்சின் இணைய நம்பிக்கை, பாதுகாப்பு ஆய்வுத் திட்டத்தின் கீழ் வருகிறது. தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக் கண்டறிய கருவிகளை உருவாக்குவதிலும் பயனாக்குவதிலும் கவனம் செலுத்தும்.

சிங்கப்பூரின் 2025 ஆய்வு, புத்தாக்கம், நிறுவன திட்டத்தின் அறிவார்ந்த தேசம் மற்றும் மின்னிலக்கப் பொருளியல் தளத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளில் மொத்தம் $50 மில்லியன் வரையிலான நிதியுதவியை இந்த நிலையம் பெறும்.

தேசிய ஆய்வு அறநிறுவனம் ஜனவரி மாதம் அறிவித்த $20 மில்லியன் நிதியுடன் கூடுதலாக $30 மில்லியன் வரையிலான நிரப்புத் தொகையும் இதில் அடங்கும்.

அதிகரிக்கப்பட்டுள்ள நிதியுதவி, நிலையம் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட மெய்நிகர் இடத்தை வழங்குவதற்கான அதன் நோக்கத்தை விரிவுபடுத்த உதவும். மேம்பாட்டாளர்கள் உண்மையான சூழ்நிலைகளில் இணையத் தீங்குகளுக்கு தீர்வுகளை பரிசோதிக்க இது வகைசெய்யும்.

உரிமம் மற்றும் பயனுள்ளதாக கண்டறியப்பட்ட தீர்வுகளுக்கான சேவை ஒப்பந்தங்களையும் கேட்டோஸின் விரிவாக்கப்பட்ட செயல்பாடு உள்ளடக்கும்.

உதாரணமாக, செக்மேட், தொண்டூழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2023 மார்ச் மாதம் அறிமுகம் கண்டது.

செக்மேட் மேம்பாட்டாளர்கள் சேவையை அதிகரிக்கவும், சரிபார்ப்புக்கு அதிக தொண்டூழியர்களை ஈர்க்கவும், காலப்போக்கில், லாபநோக்கற்ற அமைப்பாக அதனைப் பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

கேட்டோஸால் உருவாக்கப்பட்ட பிற திட்டங்களில், இணையக் காணொளிகள், பதிவுகளில் பயம், கோபம் போன்ற உணர்ச்சிகள், வெறுப்புப் பேச்சு போன்றவற்றைக் கண்டறிந்து எச்சரிக்கும் பகுப்பாய்வு இயந்திரங்களும் அடங்கும்.

ரிட்ஸ் கார்ல்டன், மில்லினியா சிங்கப்பூர் ஹோட்டலில் மே 15ஆம் தேதி நடைபெற்ற இணைய நம்பிக்கை, பாதுகாப்பு கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் இந்த நிலையம் அதிகாரபூர்வமாக அறிமுகம் கண்டது.

அறிமுகவிழாவில் கலந்துகொண்ட தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, இந்தப் புதிய நிலையம், “இணையப் பாதிப்புகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு பயனுள்ள கருவி” என்று வருணித்தார்.

“விரைவான, காலத்துடனான ஒத்துழைப்பு, கூட்டுப் பரிசோதனை, சிறந்த தீர்வுகளைக் கண்டறிதல் ஆகியவற்றின் மூலம், சிங்கப்பூரில் இணைய நம்பிக்கை, பாதுகாப்பின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதே நோக்கம்,” என்று அறிவார்ந்த தேசம், இணையப் பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திருவாட்டி டியோ கூறினார்.

இந்த நிகழ்வில் 250க்கும் மேற்பட்ட உள்ளூர், அனைத்துலக இணைய நம்பிக்கை, பாதுகாப்பு வல்லுநர்கள், கொள்கை மற்றும் கல்வி போன்ற துறைகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.