பிணை அனுமதி கிடைத்தும் திங்கள் வரை உள்ளேதான்!
முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தமைக்காக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பூரைச் சேர்ந்த நால்வரையும் பிணையில் விடுவிக்க மூதூர் நீதிமன்றம் இன்று நண்பகலில் அனுமதி வழங்கியுள்ள போதிலும், அவர்கள் திங்கட்கிழமைதான் விளக்குமறியலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகின்றது.
இன்று வெள்ளிக்கிழமை மதியத்தையொட்டி நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை ஊழியர்கள் பள்ளிவாசல் தொழுகைக்காக இடை விடுமுறையில் சென்றனர்.
மேற்படி நால்வரையும் சரீரப் பிணையில் விடுவிப்பதற்கான அனுமதியை மூதூர் நீதிவான் நீதிமன்றம் இன்று பகல் வழங்கியுள்ள போதிலும், அதற்குப் பின்னர் அது தொடர்பான சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்து, அவர்களைப் பிணையில் வெளியே கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நாளை சனிக்கிழமையும், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால், இனிமேல் அவர்கள் பிணையில் திங்கட்கிழமையன்றுதான் வெளியே வர வாய்ப்புக் கிடைக்கும் என்று தெரிகின்றது.