இலங்கையில் தொடர்கின்றது சீரற்ற காலநிலை! அனர்த்தங்களில் சிக்கி மேலும் மூவர் உயிரிழப்பு!!

இலங்கையில் சீரற்ற காலநிலை தொடர்கின்றது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலத்த மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் மீது பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஆண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதேவேளை, இரத்தினபுரி – பலாங்கொடை பிரதேசத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலத்த மழையுடனான காலநிலையால் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 67 ஆயிரத்து 591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த மழையால் 12 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்று நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டை ஊடறுத்து தென்மேற்கு பருவப் பெயர்ச்சி அதிகரிப்பதால், காற்றுடன் கூடிய மழை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, காலி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.