நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்த சிறந்த தலைவரே ரணில்! – வடக்கு ஆளுநர் சார்ள்ஸ் சுட்டிக்காட்டு.
“நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்து சவால்களைத் தனி நபராக எதிர்கொண்டு நாட்டை மாற்றியமைத்த சிறந்த தலைவர் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.”
இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழ். நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் (24) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“யாழ். பல்கலைக்கழகத்துக்கான பாரிய மைல்கல் நிகழ்வாக இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது. நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த இந்த கட்டடத் தொகுதியை விரைவில் திறந்து, பயன்பாட்டுக்கு வழங்குமாறு கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியிம் கோரிக்கை விடுத்தேன்.
கோரிக்கையை ஏற்று, மே மாதம் கட்டடம் திறக்கப்படும் என அவர் கூறினார். அதன் பின்னர் ஒரு தடவை கூட இது தொடர்பில் பேசவில்லை. எனினும், வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஜனாதிபதி இந்தக் கட்டடத்தைத் திறந்து வைத்துள்ளார். இதுவே தலைமைத்துவத்துக்கான சிறந்த வெளிப்பாடு. சிறந்த தலைவர் ஒருவர் செயற்படக்கூடிய விதம் இதுவே.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்த தலைவர் எமது ஜனாதிபதி. அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்சாரம் இன்றி நாடு இருளுக்குள் கிடந்தபோது, தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்று சவால்களை அவர் வெற்றிகொண்டார்.
பல சவால்களைத் தனி நபராக எதிர்கொண்டு, நாட்டை அவர் மாற்றியமைத்தார். இவ்வாறான ஜனாதிபதியின் பிரதிநிதியாக வடக்கில் ஆளுநராக சேவையாற்றுவதில் பெருமிதம் அடைகின்றேன்.” – என்றார்.