4 வயது மகனை மிளகாய் சாப்பிடவைத்து மரணத்துக்கு காரணமான தந்தைக்குச் சிறை.
சிங்கப்பூர்: நான்கு வயது சிறுவன் ஆடைகள் அணிந்திருந்த நிலையில் மலம் கழித்து அசுத்தப்படுத்தியதால் அவரது தந்தை சினங்கொண்டார்.
அதற்குத் தண்டனையாக மிளகாயைச் சிறுவனின் வாயில் திணித்து சாப்பிடவைத்தார்.
மிளகாயைச் சாப்பிட்ட சிறுவன் தமது தொண்டையைக் காட்டுவது போல விரல்களை நீட்டிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. பிறகு அவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.
தமது மகனைத் தூக்கிக்கொண்டு அந்த ஆடவர் அருகில் இருந்த மருந்தகத்துக்கு ஓடினார். ஆனால் அச்சிறுவன் மூச்சுவிடவில்லை என்றும் நாடித் துடிப்பு இல்லை என்றும் மருத்துவர் தெரிவித்தார்.
சிறுவன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதியன்று செங்காங் வட்டாரத்தில் உள்ள அவர்களது வீட்டில் நிகழ்ந்தது.
மிளகாயின் கூர்மையான முனை சிறுவனின் தொண்டைக் குழியில் சிக்கிக்கொண்டதால் அவரால் முச்சுவிட முடியாமல் போனது என்றும் அதுவே மரணத்துக்கு காரணம் என்றும் உடற்கூராய்வில் தெரியவந்தது.
மாண்ட சிறுவனின் 38 வயது தந்தைக்கு மே 30ஆம் தேதியன்று எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மாண்ட சிறுவன், அவரது சகோதரர்கள் ஆகியோரின் அடையாளத்தைக் காக்க சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.