தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் குறித்த முடிவு நீதிமன்றத்தில்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை நிர்ணயிக்கும் வகையில் தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி தோட்டக் கம்பனிகள் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தன.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (31) உத்தரவிட்டது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தமது பக்க வாதங்களை முன்வைத்தார்.

அதனையடுத்து, மேலதிக விடயங்கள் மீதான வாதங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டதுடன், அகரபதன பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்ட 21 தோட்ட கம்பனிகள் இந்த மனுவை சமர்ப்பித்திருந்தன.

தொழில்துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் தொழிலாளர்துறை ஆணையாளர் உட்பட 52 நபர்கள் , இதற்கு பொறுப்பாளர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அதன்படி, இந்த மனு தொடர்பான கருத்துகளை இம்மாதம் 31ஆம் தேதி உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1350 மற்றும் ரூ.300 கொடுப்பனவுகள் , மற்றும் மேலதிக கொடுப்பனவுகளாக ரூ. 80 என நிர்ணயித்து , தொழிலாளர் அமைச்சர் அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதாக மனுதாரர் தோட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மே தினக் கூட்டங்களில் அரசியல்வாதிகள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தொழிலாளர் துறை அமைச்சர் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் இதுபோன்ற முடிவை எடுத்திருப்பது இயற்கை நீதியின் சட்டக் கோட்பாட்டை மீறுவதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

எனினும் இது முழுக்க முழுக்க தன்னிச்சையான முடிவு என்றும் அதனை ரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறும் தோட்டக் கம்பனிகளால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.